கோவை: “அதிமுகவின் அறிக்கையைப் படித்தோம். தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசுவார்கள். சரியான நேரத்தில் பேசுவார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை கவுண்டம்பாளையத்தில் என்மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கோயம்புத்தூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறேன். அதிகமாக பேசுவதற்கு நமக்கு நேரம் இல்லை. விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அதிமுகவின் அறிக்கையைப் படித்தோம். தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுகுறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசுவார்கள். சரியான நேரத்தில் பேசுவார்கள்.
நாங்கள் செய்தியாளர்களை சந்திக்கும்போது இதுகுறித்து பேசுவோம். இதுதான் என்னுடைய கருத்து. பாஜகவைப் பொறுத்தவரை, தேசிய கட்சி. எல்லாவற்றுக்கும் ஒரு நடைமுறை உள்ளது. தேசிய தலைவர் இருக்கிறார். இதுகுறித்து தேசிய தலைமை பேசும், நன்றி” என்று அவர் கூறினார்.
முன்னதாக, “2 கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது” என்று அறிவித்துள்ள அதிமுக, ‘#நன்றி_மீண்டும்வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேகை இணைத்துள்ளது. அதனை அதிமுகவினர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். | வாசிக்க > ‘நன்றி மீண்டும் வராதீர்கள்’ – பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஏன்?