புதுடெல்லி: இந்திய நாட்டுடனான கனடாவின் உறவு முக்கியமானது என்றும் இந்தோ-பசிபிக் ஒப்பந்தம் போன்றவற்றில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை கனடா தொடரும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார்.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடி தரும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்திய அரசு அறிவித்தது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் உறவு கனடா நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் நேற்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம். தற்போதுள்ள சூழலை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்தியா உடனான உறவை கனடா மிகவும் மதிக்கிறது. இது ஒரு சவாலான விஷயம். அதேபோல் இந்தோ-பசிபிக் போன்ற ஒப்பந்தங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை கனடா தொடரும்.
எங்கள் சட்டத்தை, குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிவதற்கும் எங்களுக்கு பொறுப்பு உள்ளது. இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கனடா அரசின் நிலை என்னவாக இருக்கும் எனக் கேட்கிறீர்கள். கனடாவின் மண்ணில் கனடாவின் குடிமகன் ஒருவரைக் கொல்வது என்பது கனடாவின் இறையாண்மையை மீறும் செயல் என்பதால் அது கவலை தரக்கூடியதாகவே இருக்கும். இவ்வாறு பில் பிளேர் தெரிவித்துள்ளார்.