சீனாவில் நேற்று (25) நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இந்தியா 19 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தையும் இலங்கை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணி சார்பாக Smriti Mandhana 46 ஓட்டங்களையும், Jemimah Rodrigues 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இப்போட்டியில் பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 8 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இலங்கை அணி சார்பாக ஹசினி பெரேரா 25 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர். டைட்டாஸ் சாது 4 ஓவர்களில், 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.