”அதிமுக நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறும்; பழனிசாமியால் தடுக்க முடியாது!” – டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணியிலிருந்து பிரிந்திருக்கின்றன, அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள், அதன் பிறகு டெல்லிக்குப் போய் கூட்டணி பேசினார்கள். முன்னாள் அமைச்சர்கள், யாரையோ சந்திப்பதற்காக டெல்லிக்குச் சென்று காத்திருந்துவிட்டு, சந்திக்க முடியாமல் திரும்பினர். அதில் ஏற்பட்ட ஏமாற்றம்தான் `அண்ணாவைப் பற்றி பேசினார்கள், அதனால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்’ என சொல்கிற மாதிரி தெரிகிறது. பிரிவுக்கு இதைத்தாண்டிய காரணம் இருக்கிறது.

டி.டி.வி.தினகரன்

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்ததுதான் உண்மையான அ.தி.மு.க. தற்போது கையகப்படுத்தப்பட்ட, களவாடப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மக்கள் மத்தியில் தி.மு.க-மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. 2019-ல் கூட்டணி பலத்தை வைத்து பா.ஜ.க வந்து விடக் கூடாது என மக்களை பயமுறுத்தி, தி.மு.க வெற்றி பெற்றது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைப் பெற முடியும் என முதல்வர் சொல்கிறார்.

தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னை பயிர்கள் கருகி, விவசாயிகள் இறக்கின்ற நிலையில் இருக்கின்ற இந்த நேரத்தில்கூட கூட்டணியிலுள்ள கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் கேட்டு உரிமையை பெற்றுத் தரமுடியவில்லை. காவிரியில் தண்ணீரை பெற முடியவில்லை. வருகின்ற தேர்தலில் கூட்டணியைக் காரணம் காட்டி, தி.மு.க மக்களை ஏமாற்ற முடியாது. பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற யூகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. மகளிர் உதவித்தொகை கிடைக்காத குடும்பத்தில் பிரச்னை இருப்பதை பார்க்கிறோம். விடியலை தருகின்ற ஆட்சியாக இல்லாமல் காமொடி ஆட்சியாக, மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன்

ஆட்சியைக் கொடுத்த சசிகலாவுக்கும், தொடர்வதற்கு காரணமாக இருந்த ஓ.பி.எஸ்ஸையும் ஏமாற்றிவிட்டு, மத்தியில் ஆள்கின்ற பா.ஜ.க அரசு துணையுடன் கட்சியை எடப்பாடி பழனிசாமி கையகப்படுத்தி வைத்திருந்தார். நிறைய பேர்மீது வழக்கு பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பயமுறுத்தி, பலரை பழனிசாமி தன்னுடன் இருக்க வைத்தார்.

துரோகம் என்பது பழனிசாமி ரத்தத்தில் இருக்கிறது. அவர் ஏமாற்றுக்காரர். நாளை யார் வேண்டுமானாலும் ஏமாற்றுவார் அதை பா.ஜ.க புரிந்துகொள்ளும். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என கர்நாடகாவில் பா.ஜ.க போராட்டம் நடத்தியிருப்பது குறித்து அண்ணாமலையிடம் கேட்க வேண்டும். தேசியக் கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், மாநிலக் கட்சிகள்தான் அந்த மாநில உரிமைகளுக்காகப் போராட முடியும் என்பதுதான் உண்மை.

அ.தி.மு.க-வை நெல்லிக்காய் மூட்டை என்று ஹெச்.ராஜா உண்மையைச் சொல்லியிருக்கிறார். இரட்டை இலையை, ஆட்சி அதிகாரத்தைக் காட்டி அ.தி.மு.க தொண்டர்களை பழனிசாமி ஏமாற்றி வந்தார். தற்போதும் இரட்டை இலையைக் காட்டி கபளீகரம் செய்துவைத்திருக்கிறார். இரட்டை இலை மட்டும் இல்லை என்றால், அ.தி.மு.க நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறும், அதை பழனிசாமியால் தடுக்க முடியாது.

உள் இட ஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு ஜெயலலிதா வலியுறுத்தியது, அதை நான் வரவேற்கிறேன். ஸ்டாலினின் விளம்பர வெளிச்சத்தில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இரண்டரை வருடங்களில் உண்மையான சாதனை எதையும் செய்யவில்லை. இதுதான் யதார்த்தம் மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். தி.மு.க திருந்தாது என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார்கள்.

டி.டி.வி.தினகரன்

பழனிசாமி ஆட்சிமீது மக்கள் கோபப்பட்ட காரணத்தால் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் பழனிசாமிக்கும், தி.மு.க-வுக்கும் மாற்றாக மக்கள் அ.ம.மு.க-வுக்கு வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். முதல்வர் டெல்டாகாரன் என்கிறார். ஜீவாதார பிரச்னையில் கூட்டணிக் கட்சி ஆட்சி செய்கின்ற கர்நாடக அரசிடம் பேசி நியாயமான முறையில் தண்ணீர் பெற்றுத் தருவதில் தோல்வியடைந்துவிட்டார். தமிழ்நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராடினால்தான் காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

எடப்பாடி பழனிசாமி

கொடநாடு வழக்கில் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. ஜெயக்குமார், பழனிசாமி, முனுசாமி என அவர்களுக்குள்ளாகவே சேர்ந்து கையை கோத்துக்கொண்டு, மெகா கூட்டணி அமைப்பார்கள். அ.ம.மு.க பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய கூட்டணியில் இருக்கும், அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிடும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.