பணி நிரந்தரக் கோரிக்கை; கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள்!

கொரோனா பேரிடர் பெரும் தொற்றுக் காலத்தில், 2020-ம் ஆண்டு தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை, நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தொடர்ந்து இரண்டு நாள்களாக உண்ணாவிரதம் இருந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஜயலக்ஷ்மி நம்முடன் பேசுகையில், “2019-ம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வு எழுதி மெரிட் அடிப்படையில் 2020-ம் ஆண்டு கொரோனா உச்சத்திலிருந்த நேரத்தில், நாங்கள் பணியில் அமர்த்தப்பட்டோம். ஒரு லட்சம் செவிலியர்கள் எழுதிய இத்தேர்வில், 6,000 செவிலியர்கள் தேர்வுசெய்யப்பட்டோம். இதில் 3,000 செவிலியர்களுக்குத் தற்காலிக செவிலியர் பணியிலிருந்து, நிரந்தரத்தன்மையுடைய செவிலியர் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் மீதமுள்ள 3,000 செவிலியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி 2022-ம் ஆண்டு நிறுத்தம் செய்யப்பட்டனர். நாங்கள் மெரிட் அடிப்படையில் தேர்வாகவில்லை என்று தமிழக அரசு கூறிய காரணத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரியப் பணி நியமன முறை பின்பற்றப்பட்டுள்ளது என்று கூறி, ஆறு வாரங்களுக்குள் மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கடந்த ஜூலை 12-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாததைக் கண்டித்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் வாக்குறுதி 356-ல் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிராக எங்களை வேலையிலிருந்து நிறுத்தி, நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். இதுவரை அரசு தரப்பிலிருந்து எங்களிடம் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களுக்கு உயர் நீதிமன்றம் மூன்று நாள்கள் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் நீதிமன்றம் அளித்த கால அவசரத்தை மீறி நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். ஆனால் அரசு தரப்பிலிருந்து எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த மரிய புஷ்பம், “என்னைப் போன்ற பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பிணிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாகச் சாப்பிடாமல் இருப்பதால், எங்களால் சரிவரக் குழந்தைக்குப் பால் ஊட்ட முடியவில்லை. குழந்தைகள் பாலுக்கு அவ்வப்போது அழுது கொண்டிருக்கின்றன. இந்த அவலநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். பணியில் இருக்கும்போது, நான் இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். அதையும் தாண்டித்தான் இந்தப் பணியில் நான் முழு மனதுடன் சேவை செய்து வந்தேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை என் உரிமைக்காக நான் போராடி வருகிறேன். எங்களை நிரந்தரத்தன்மையுடைய செவிலியர்களாக மாற்ற வேண்டும். இதனால் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்படப் போவதில்லை. அதனால் அரசு எங்களைக் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் செண்பகம் நம்மிடம் பேசுகையில், “90 சதவிகிதம் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாக வீதியில் நிற்கிறோம். பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க அரசு, இதுவரை எங்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. மற்ற மாநிலங்களில் காலி பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் நமது மாநிலத்தில் காலி பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன. 3,290 செவிலியர்களில் பலர் வெளிநாட்டுக்கும் வேறு வேலைக்கும் சென்றுவிட்டனர். எஞ்சியிருப்பது ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே. ஆனால் காலியிடங்கள் கிட்டத்தட்ட 3,000 இருக்கின்றன. எங்கள் ஆயிரம் பேரை நிரந்தரப் பணியாளராக்குவதில், அரசுக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நாங்கள் பணியமர்த்தப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எங்கள் உரிமை மறுக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. செவிலியர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதால், இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் நாங்கள் தனியார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்தோம். ஆனால், எங்களை மிரட்டி நிர்ப்பந்தம் செய்தனர். அதனடிப்படையில் தான் நாங்கள் தற்காலிக செவிலியர் பணியில் சேர்ந்தோம். சென்னையில் பெருந்தொற்று அதிகரித்து வந்த நிலையில், நாங்கள் பெரும்பாலும் சென்னையில் பணியமர்த்தப்பட்டோம். வாகன வசதிகூட இல்லாத நிலையில், சொந்த செலவில் வாகனங்களை ஏற்படுத்திக் கொண்டு சென்னைக்கு வந்தோம். இந்த நிலையில் தமிழக அரசு எங்களை கைவிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் இப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும்.

எல்லா தகுதியும் இருந்தும், அரசு ஏன் எங்களுக்கு வேலை தர மறுக்கிறது என்று எங்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது எங்களின் உரிமை. நாங்கள் நிரந்தர முறை செவிலியர்களாகப் பணியமர்த்தப்பட்டால் மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு கிடைப்பதோடு எங்களுடைய வேலையும் உறுதிசெய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணிகள் உட்பட 14-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்  மயக்கமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மருத்துவமனையிலும் அவர்கள் தண்ணீர் தவிர வேறு எதுவும் உண்ண மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.