LEO Audio Launch: "அரசியல் காரணமில்லை!"- `லியோ' ஆடியோ லாஞ்ச் ரத்து; படக்குழு சொல்லும் காரணம் என்ன?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். இம்முறை ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, மொத்தத் திரையுலகினரும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘லியோ’ படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்.

X தளத்தில் அவர்கள் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், “பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் ‘லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். ரசிகர்களுக்குத் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்களை வழங்குவோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் X பதிவு

தொடர்ந்து அரசியலுக்கு வரும் எத்தனிப்பைக் காட்டும் விஜய்க்கு அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தம் இது என ஏற்கெனவே சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேசப்பட்டுவந்த நிலையில் இதே பதிவில் ‘இந்த முடிவுக்குப் பின்னணியில் அரசியல் அழுத்தமோ மற்ற காரணங்களோ இல்லை!’ என்றும் தெரிவித்திருக்கிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்.

ஜெகதீஷ் பழனிச்சாமி பதிவு

விஜய்யின் மேனஜரும், ‘லியோ’ படத்தின் இணைத் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமி, “இது எங்களுக்கு கடினமான முடிவுதான். ரசிகர்களுக்கு இருக்கும் ஏமாற்றம் எங்களுக்கும் இருக்கிறது. பல ஆப்ஷன்கள் யோசித்தும், பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் சரியாகக் கைகூடி வரவில்லை. டிக்கெட்களுக்கு மிக அதிக டிமாண்ட் இருப்பதால் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

`லியோ’ படக்குழுவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.