“கடைசி பந்தயம்…” – ம.பி. தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து கமல்நாத் விமர்சனம்

போபால்: மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், “தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்ட பாஜக பிழையான நம்பிக்கையுடன் தனது கடைசி பந்தயத்தில் விளையாடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 39 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக திங்கள்கிழமை இரவு வெளியிட்டது. அதில் ஃபக்கான் சிங் குலாஸ்டே, பிரகலாத் சிங் படேல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ராகேஷ் சிங், ரிதி பத்தாக், கணேஷ் சிங், உதயபிரதாப் சிங் என ஏழு மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மாநிலத்திலுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 39 பேர் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. தற்போது இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் கமல்நாத், “தோல்வியை தானே ஒப்புக்கொண்டுள்ள பாஜக, தவறான நம்பிக்கையில் தனது கடைசி ஆட்டத்தினை விளையாடுகிறது. கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல், அக்கட்சியின் உட்கட்சி பூசலை வெளிப்படுத்துவதாகவும், முதல்வர் சிவராஜ் சவுகானின் 15 ஆண்டு கால ஆட்சியை உள்ளடக்கிய பாஜகவின் 18 ஆண்டு கால ஆட்சியின் வளர்ச்சி கூற்றினை மறுப்பதாகவும் இருக்கிறது. மத்தியப் பிரதேசம் குறித்த வளர்ச்சியின் கூற்றுகள் அனைத்தும், பச்சைப் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 114 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்தது. ஆனால், 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விசுவாசமான எம்எல்ஏக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால், அந்த அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்த சிவராஜ் சவுகான் தலைமையில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறியதால் நடந்த இடைத்தேர்தலுக்கு பின்னர் பாஜகவுக்கு 126 சட்டப்பேரவை உறுப்பினர்களும், காங்கிரஸ் வசம் 96 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றாலும், தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.