பெங்களூரு,தமிழகத்துக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த, ‘பந்த்’ போராட்டத்தால், கர்நாடகாவின் பெங்களூரு நகரமே முடங்கியது. கடைகள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., – ம.ஜ.த., மற்றும் ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு, 5,000 கன அடி நீர் திறந்து விடும்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தினமும் போராட்டம், சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார், பெங்களூரு நகரில் நேற்று ஒருநாள், ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு, கன்னட திரையுலகினர் உட்பட, 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
முன்னெச்சரிக்கையாக, தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.
அறிவித்தபடி, நேற்று காலை 6:00 முதல், மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு நடத்தப்பட்டது. காலை 6:00 மணிக்கே பலரும் போராட்டத்தை துவங்கினர். சில கன்னட அமைப்பினர், கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து, கைது செய்தனர்.
நகரின் டவுன்ஹால் பகுதியில், சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி கட்சியினரும்; கன்னட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் பேரணியாக புறப்பட முயன்றபோது, கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று, ஜெயநகரில் பா.ஜ., – எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமையிலும்; சேஷாத்திரிபுரத்தில் ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ்கவுடா தலைமையிலும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தனியார் ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்படவில்லை. விமான நிலையம் உட்பட சில பகுதிகளுக்கு மட்டும் சிலர் இயக்கினர். கடைகள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
கர்நாடக அரசு பஸ்கள் காலை 10:00 மணிக்கு பின் சொற்ப அளவில் இயக்கப்பட்டன. ஆயினும், பயணியர் யாரும் வராததால், பஸ் நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன. மெட்ரோ ரயில்கள் இயங்கினாலும், அவற்றிலும் கூட்டமில்லை.
வாகனங்கள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் இயங்கின. வங்கிகள், தபால் நிலையங்கள் இயங்கினாலும் வாடிக்கையாளர்கள் வரவில்லை.
மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம்நகர் உட்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மைசூரில் இருந்து, சாம்ராஜ் நகர் வழியாக தமிழகத்துக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஹோட்டல் மீது கல் வீச்சு
‘அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட வேண்டும்’ என, போராட்டக்காரர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், நேற்று சில ஹோட்டல்கள் திறந்திருந்தன.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெங்களூரு ஜெயநகரில் உள்ள, ‘உடுப்பி ஹப்’ என்ற ஹோட்டலுக்கு, நேற்று காலை 9:30 மணியளவில் வந்த நான்கு மர்ம நபர்கள், கற்களை வீசிவிட்டு தப்பியோடினர்.
அதே பகுதியில், மேலும் இரண்டு ஹோட்டல்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன.
தமிழக வாகனங்களுக்கு தடை
பெங்களூருக்கு சேலம் கோட்டம் சார்பில் இயக்கப்படும், 120க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மட்டுமின்றி, பிற கோட்டங்களைச் சேர்ந்த, 80 பஸ்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக எல்லையான ஓசூர் பஸ் ஸ்டாண்டுடன், நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டன. தமிழகம் – கர்நாடகா எல்லையான, நீலகிரி மாவட்டம், முதுமலை கக்கனல்லா சோதனைச் சாவடியில் நேற்று காலை 6:00 மணி முதல் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.தமிழகம், கேரளாவில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தொரப்பள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டன. அங்கு வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு பின், கேரளா, கர்நாடகா பதிவு கொண்ட வாகனங்கள் மட்டும், நீலகிரி வழியாக கர்நாடகா சென்று வந்தன. ஆனால், தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள், கர்நாடக மாநிலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், மாலை 6:30 மணிக்கு பின், கர்நாடாகாவுக்கு மீண்டும் வழக்கம் போல் பஸ் சேவை துவங்கப்பட்டதாக, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3,000 கன அடியாக குறைகிறது
காவிரி ஒழுங்காற்றுக்குழு கடந்த, 15ல் கூடியது. அப்போது, அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு, 5,000 கன அடி நீரை திறந்துவிடும்படி உத்தரவிட்டது. அந்த உத்தரவின் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுடில்லியில் மீண்டும் நடந்தது. இக்குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் வாதங்களை வைத்தனர். 123 டி.எம்.சி.,க்கும் மேல் நீர் தரப்பட வேண்டிய நிலையில், இதுவரை வெறும் 40 டி.எம்.சி., அளவு நீர் மட்டுமே தரப்பட்டுள்ளதாக கூறிய தமிழக அரசு, வினாடிக்கு, 12,500 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தது.கர்நாடகா தரப்பில் வழக்கம்போல தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டன. இருப்பினும், வினாடிக்கு, 3,000 கன அடி நீரை, நாளை துவங்கி, அக்., 15 வரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு, ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.ஏற்கனவே 5,000 கன அடி நீரை திறந்துவிடும்படி கூறப்பட்டு வந்தநிலையில், அது, 3,000 கன அடி என, மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
29ம் தேதியும் ‘பந்த்’
நாளை மறுதினம் மாநிலம் தழுவிய பந்த் நடத்த, பல்வேறு கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகத்துக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கும்படி, காவிரி நீர் ஒழுங்காற்று குழு நேற்று மீண்டும் உத்தரவிட்டுள்ளதால், அன்றைய தினம் போராட்டம் தீவிரமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்