பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் நிலையில், கன்னட செயற்பாட்டாளர் வாட்டாள் நாகராஜ், விவசாயிகள் தலைவர் குருபுரு சாந்தகுமார் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முழு அடைப்புப் போராட்டம் முழு வீச்சில் நடைபெறவில்லை. நகரின் ஒருசில பகுதிகளில் பூரண ஆதரவு இருந்தாலும்கூட, அரசு ஆதரவின்மை காரணமாக பல பகுதிகளில் போராட்டம் நீர்த்துப் போனது.
பந்த் அறிவிப்பு பின்னணியும் கள நிலவரமும்: காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டன. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதைக் கண்டித்து கர்நாடக நீர்பாதுகாப்பு குழு உள்பட பல்வேறு குழுக்கள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திட்டமிட்டபடி காலை 6 மணிக்கு பந்த் தொடங்கப்பட்டது.
நகரில் ஆங்காங்கே சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. குறிப்பாக, டவுன் ஹால், ஃப்ரீடம் பார்க் பகுதிகளில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
வாட்டாள் நாகராஜ், குருபுரு சாந்தகுமார் கைது: கன்னட செயற்பாட்டாளர் வாட்டாள் நாகராஜ், அவரது சகாக்களுடன் ஆளுநர் மாளிகை முன்னர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கர்நாடக அரசு, காவல் துறையைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்குவதாகத் தெரிவித்தார். தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கும் அரசை எதிர்க்கும் தங்களது போராட்டம் தொடரும் என்றும், முதல்வர் வீட்டைக் கூட தேவைப்பட்டால் முற்றுகையிட்டுப் போராடுவோம் என்றும் ஆவேசமாகக் கூறினார்.
முன்னதாக, கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர் நாராயண கவுடா மற்றும் அவரது கூட்டாளிகள் காந்திநகரில் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் தலைவரான குருபுரு சாந்த்குமாரும் மைசூர் வங்கி சர்கிள் பகுதியில் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஃப்ரீடம் பார்க் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில், அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதுவரை ஆங்காங்கே போராட்டங்கள், மறியல், பேரணி எனத் திரண்டு 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறார் முதல்வர் சித்தராமையா? – காவிரி பிரச்சினையில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “கர்நாடக மக்களின் நலனைக் காப்பதில் எனது அரசு ஒருபோதும் தவறியது இல்லை. பருவமழை போதிய அளவு இல்லாத துயர்மிகு நேரத்தில் காவிரி நீரை இருமாநிலங்களும் பங்கிட்டுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை நான் எடுத்துக் கூறிவிட்டேன்.
இன்று பெங்களூருவில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டம் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் ஆதரவோடு நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் அவர் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. மாநில நலன், மக்கள் நலனுக்காக அவர்கள் போராடவில்லை. அரசியல் லாபத்துக்காக போராடுகிறார்கள்” என்றார்.
திமுகவின் பி டீம்.. சாடிய குமாரசாமி: பெங்களூரு முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, “தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை எதிர்த்துப் போராடும் கன்னட அமைப்பினரையும், விவசாய சங்கத்தினரையும் காவல் துறையைக் கொண்டு கைது செய்து போராட்டத்தை மாநில அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஆட்சிக்கு வரும் முன்னர் காவிரி உரிமை கோரி போராட்டங்களில் ஈடுபட்ட அதே காங்கிரஸ் தான் இன்று போராட்டத்தை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்களை இரவோடு இரவாக கைது செய்தது என்பது கர்நாடக ஆளுங்கட்சியின் உச்சபட்ச தீங்கு.
கர்நாடகாவில் காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு நீதி, கன்னடிகர்களுக்கு ஒரு நீதி என்று இருக்க முடியுமா என்ன? கோவிட் விதிமுறைகளையும் மீறி காங்கிரஸ் தலைவர்களால் அன்று மேகேதாட்டுவுக்கு பாதயாத்திரை செல்ல முடிந்தது. ஆனால், இன்று கர்நாடக மக்களின் உயிர்நாடியான காவிரிக்காக அவர்கள் போராட அனுமதியில்லை. காவிரி பிரச்சினையே சித்தராமையா திசை திருப்பிவிட்டார். கர்நாடக காங்கிரஸ் திமுகவின் பி டீம் ஆகிவிட்டதே இதற்குக் காரணம்” என்றார்,.
போராட்டம் ஒருபுறம், உத்தரவு மறுபுறம்: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையமானது வரும் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மொத்தத்தில் இன்றைய பந்த் பகுதி வெற்றி என்ற அளவிலேயே நடைபெற்றுள்ளது. அரசுப் பள்ளி, கல்லூரி, வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டதால் அவை வழக்கம்போல் இயங்கின. ஐடி நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்களும் இயங்கின. பொதுமக்களின் கூடுகை மட்டும் நகரில் வழக்கத்தைவிட குறைவாகக் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.