காவிரி விவகாரம்: `தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!' – சீமான் கண்டனம்

காவிரிநீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகம் – தமிழ்நாடு இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம், “தினமும் விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என, கடந்த 21-ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்

இதனால் பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. இது குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி விவகாரத்தில் பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றன. இது வெறும் அரசியலுக்காகவே நடத்தப்படுகிறது. கர்நாடக மக்களுக்காக அல்ல” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நதிநீரை உரிய அளவில் தர மறுத்துவரும் கர்நாடக அரசு, நீதிமன்ற உத்தரவுப்படி திறந்துவிடும் சொற்ப நீரையும் திறக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் போராடிவருவது, சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு இறுதிச்சடங்குகள் செய்து அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அரை நூற்றாண்டு காவிரி உரிமை சட்டப் போராட்டத்தில், வரலாறு நெடுகிலும் தமிழ்நாடு காவிரி நதியில் தமக்குள்ள நீர் உரிமையை இழந்தே வந்திருக்கிறது.

கர்நாடகா பாஜக போராட்டம்

கீழ்ப்படுகை நாடுகளுக்கான பங்கு உலகெங்கும் குறைக்கப்பட்டதே இல்லை. ஆனால், சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு படிப்படியாகச் சட்டத்தின் பெயராலேயே குறைக்கப்பட்டது. இத்தனை துரோகங்களுக்குப் பிறகும், இறுதித் தீர்ப்பு அடிப்படையில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச காவிரிநீரைக்கூட சட்டப்படி அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் மூலம் கர்நாடகத்திடம் கெஞ்சிக் கேட்டும் பெற முடியவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீரப்பையே செயல்படுத்த முடியவில்லை என்றால் இதுதான் இந்தியாவின் ஒருமைப்பாடா?

தன்னிச்சை அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தைக்கூட முறையாகச் சட்டப்படி இயங்கச் செய்து நீரினை பெற்றுத்தர முடியவில்லை என்றால், ஒன்றிய அரசு என்ற ஒன்று இந்த நாட்டுக்கு எதற்கு… இதுதான் இந்தியாவின் கூட்டாட்சி முறையா… தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா… ஓரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பா.ஜ.க., ஒரே நாட்டுக்குள் இருக்கும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்… தேசிய ஒருமைப்பாடு பேசும் காங்கிரஸ் கட்சி பெற்றுத்தருமா… கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமையப் பாடுபட்ட தி.மு.க., சித்தரமையா அரசிடம் பேசி காவிரிநீரைப் பெற்றுத்தருமா?

தமிழ்நாட்டின் முதல்வருக்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டக்காரர்கள்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணைகட்ட தேர்தல் அறிக்கையிலேயே 9,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்ததை அறிந்திருந்தும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்து, தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் புரிந்தன. அதற்கான எதிர்விளைவை இன்றைக்கு தி.மு.க அரசு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே அனுபவிக்கிறது. அதன் உச்சமாக, கன்னடர்கள் கர்நாடாகவில் வாழும் தமிழர்களின் கடைகளை காலி செய்யுமாறும், கர்நாடகாவைவிட்டு வெளியேறுமாறும் மிரட்டுவதும், தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதையும் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசும் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.

கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், எட்டுக் கோடி தமிழ் மக்களின் அரசப் பிரதிநிதியாவார். எனவே, தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பதிலுக்கு கர்நாடக முதலமைச்சரை அவமதிக்க ஒரு நொடி ஆகாது.

சீமான்

எனினும், தமிழரின் மாண்பு அத்தகைய இழிசெயலில் ஈடுபட அனுமதிக்காது. ஆகவே, இனியும் தமிழர்களை அச்சுறுத்தி, தமிழ்நாடு அரசினையும், முதலமைச்சரையும் அவமதிக்கும் கன்னட இன வெறியர்களின் செயலைத் தடுத்து நிறுத்துவதோடு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய காவிரி நதிநீரை உடனடியாக வழங்க வேண்டுமென கர்நாடக அரசையும், இந்திய ஒன்றிய அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.