ஹிந்தித் திரையுலகை ஒரே ஆண்டில் இரண்டு முறை மீட்ட ஷாரூக்கான்
இந்தியத் திரையுலகம் என்றாலே ஹிந்தித் திரையுலகம் என ஒரு காலத்தில் இருந்தது. தென்னிந்தியாவில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல தரமான படங்கள் வந்தாலும் அவற்றிற்கான அங்கீகாரமும் வசூலும் பெரிய அளவில் கிடைக்காமல் இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு நிலையை ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் முறியடித்தது. ஹிந்திப் படங்கள் புரியாத வசூல் சாதனையை ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான அந்தப் படம் புரிந்தது. அப்படத்தின் வசூல் சாதனை ஹிந்தித் திரையுலகத்தை கலங்க வைத்தது. அதற்கேற்றால் போல பல முன்னணி ஹிந்தி நடிகர்கள் நடித்த பல படங்கள் 'பாகுபலி 2' வெளியீட்டிற்குப் பிறகு ஓடவேயில்லை.
ஹிந்தித் திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு வராதா என ஹிந்திப் பட ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தனர். அதை 'பதான்' படத்தின் மூலம் பெரும் மகிழ்ச்சியாக மாற்றினார் ஷாரூக்கான். இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அடுத்து இந்த மாதத் துவக்கத்தில் வெளிவந்த ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படமும் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஒரே ஆண்டில் இப்படி இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்து ஹிந்தித் திரையுலகத்தை இரண்டு மடங்கு மீட்டுள்ளார் ஷாரூக்.
இந்தியாவில் மட்டும் 500 கோடிக்கும் வசூல் என்பது மற்றொரு விஷயம். அதற்கு உதவியாக மற்றொரு ஹிந்திப் படமான 'கடார்2' படமும் 500 கோடி வசூலைப் பெற்றது. ஒரே ஆண்டில் மூன்று ஹிந்திப் படங்கள் இந்திய அளவில் 500 கோடி வசூல் என்பது இதற்கு முன்பு நடக்காத ஒரு சாதனை.
இவற்றை வரும் காலங்களில் யார் முறியடிக்கப் போகிறார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வி.