ஹாங்சு: ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி-20’ வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற உலக சாதனையை படைத்தார்.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் ஆடவர் கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. இன்று (செப்.,27) நடந்த நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டியில், மங்கோலியா அணி ‘டாஸ்’ வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாள அணியில் துவக்க வீரர்கள் குசால் புர்டெல் (19 ரன்கள்), ஆசிப் ஷேக் (16 ரன்கள்) ஓரளவு சுமாரான துவக்கம் தந்தனர். அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் சூறாவளியாக சுழன்று அடித்தனர். கேப்டன் ரோகித் பவுடல் 27 பந்தில் 6 சிக்சர் 2 பவுண்டரியுடன் 61 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ச்சியாக 6 சிக்சர்
மறுபுறம் அதிரடி காட்டிய குசால் மல்லா சதம் விளாசினார். பின்னர் இணைந்த திபேந்திர சிங் முதல் பந்தில் இருந்து சிக்சர் மழை பொழிந்தார். தான் சந்தித்த முதல் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 7வது பந்தில் இரண்டு ரன்கள், அடுத்த இரு பந்துகளில் சிக்சர் என வெறும் 9 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் கடந்ததே சர்வதேச ‘டுவெண்டி-20’ வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்த நிலையில், அச்சாதனையை உடைத்தெறிந்தார் திபேந்திர சிங்.
இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. இது ‘டுவென்டி-20’ வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையும் படைத்தது. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்தது அதிகமாக இருந்தது.
அடுத்து களமிறங்கிய மங்கோலியா அணி 41 ரன்களுக்கு சுருண்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement