மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி தலைவி (திமுக) சந்திரா தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தின்போது, மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட சீத்தாமலை தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்து உள்ள மோட்டர்களை சரிசெய்யவும், புதிய மோட்டர்களை வாங்குவது, நகராட்சி பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடுவது, ஆணையாளர், பொறியாளர்களுக்கு புதிய வாகனம் வாங்குவது உள்ளிட்ட 15 தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தீர்மானங்கள் குறித்தும், வார்டு பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, கவுன்சிலர்கள் கொசு தொல்லை கட்டுப்படுத்தவும், நீண்ட காலமாக உள்ள தண்ணீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும். நகராட்சி முன்னாள் ஆணையாளர் பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போடாமல் சென்றதால், பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அவர் ஒரு வாரத்தில் கையெழுத்து போட வேண்டும், இல்லையென்றால் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது என கடும் வாக்குவாதம் செய்தனர்.
கூட்டத்தின், இறுதியாக 2வது வார்டு திமுக கவுன்சிலர் இளங்கோ பேசியதாவது: “எனது வார்டு பகுதியில் சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. எனது சொந்த செலவில் வார்டு மக்களுக்கு வாடகைக்கு தண்ணீர் வாங்கி கொடுத்து வருகிறேன். நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை தெரிவித்தும், தலைவரிடம் நேரில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தால், அவரது மகன் பெற்று கொள்கிறார்” என குற்றம்சாட்டினார்.
இதற்கு நகராட்சி தலைவர் சந்திரா முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத கண்டித்து, நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வெளியே கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, கூட்ட அரங்கில் இருந்த கவுன்சிலர்கள் பெட்ரோல் கேனை வாங்கி விட்டு, தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். மேட்டூர் நகராட்சி திமுக தலைவரை கண்டித்து, திமுக கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சி ஈடுபட்ட சம்பவம் கட்சினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.