`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' -`மேனேஜர்' ஆனாரா அண்ணாமலை?- பொங்கியது டு பேக் அடித்தது வரை!

`நான் ஒன்றும் மேனேஜர் இல்லை; ஜெயலலிதா, கருணாநிதிபோல நானும் ஒரு லீடர். லீடரைப்போலத்தான் நான் முடிவெடுப்பேன்; டெல்லி என்ன நினைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன்!’ என ஒரு காலத்தில் வீராவசனம் பேசிக்கொண்டிருந்தார் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. இப்போதோ அ.தி.மு.க கூட்டணி முறிவு விவகாரத்தில், `பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி, எதுவாக இருந்தாலும் பா.ஜ.க தேசியத் தலைமை முடிவெடுக்கும்!’ என திடீர் ஜகா வாங்கியிருக்கிறார் அண்ணாமலை. இவற்றை வைத்து மாற்றுக் கட்சியினர் தொடங்கி மீம் கிரியேட்டர்கள் வரை `அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு என்ன பயந்துட்டியா குமாரு..?’ என கலாய்த்து வருகின்றனர்.

அப்படி அண்ணாமலை, அப்போது எப்படியெல்லாம் பொங்கினார்… என்பது முதல் இப்போது எப்படி பம்மினார் என்பது வரை ஓர் ரீவைண்ட் பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

`நான் மேனேஜர் இல்லை தலைவன்!’ (மார்ச் 7, 2023)

கடந்த மார்ச் 5-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட ஐ.டி.விங் நிர்வாகிகள் கொத்தாக அ.தி.மு.க-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 7-ம் தேதி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் வளர்ச்சி திராவிடக் கட்சிகளின் கண்களை உறுத்துகிறது. எனவேதான் பா.ஜ.க தலைவர்களைத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள திராவிடக் கட்சிகள் விரும்புகின்றன. தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒரு கம்பெனி மேனேஜர்கள்போல இருக்க வேண்டும் என இங்கிருப்பவர்கள் நினைக்கிறார்கள். அப்படி என்னால் இருக்க முடியாது. நான் அரசியலுக்கு இட்லி சுடவோ, தோசை சுடவோ வரவில்லை. நான் ஒரு தலைவர் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் இருப்பேன். கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை நள்ளிரவில் வீடு தேடிச் சென்று டீ கொடுத்து சமரசம் செய்ய என்னால் முடியாது. சில முடிவுகள் சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எடுக்காத முடிவா… தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா… பா.ஜ.க-வில் 6 மாதங்கள் கழித்து இன்னும் 2 பேர் போகலாம், 4 பேர் வரலாம். தலைவர் என்ற முறையில் யாருக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுப்பேன். யார் போனாலும் கவலைப்படமாட்டேன். பா.ஜ.க-வை ஆட்சியில் அமர்த்தும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும்!” என்றார்.

`டெல்லிக்குச் சொன்னாலும் மாறமாட்டேன்!’

மேலும், “நான் இருக்கும் வரை கட்சி இப்படித்தான் இருக்கும். கஷ்டமாக இருப்பவர்கள் கிளம்பிப் போய்விடலாம். எம்.பி, எம்.எல்.ஏ, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. டெல்லியில் இருப்பவர்கள் சொன்னாலும் நான் மாறமாட்டேன். இப்படித்தான் பேசுவேன், இப்படித்தான் செயல்படுவேன். அப்படியிருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும். வரும் நாள்களில் எனது பேச்சில் இன்னும் `காரம்’ இருக்கும்!” என ஆவேசமாகப் பேசினார்.

அதேபோல சென்னை விமான நிலையத்தில் பேசும்போதும், “திராவிடக் கட்சிகளைச் சார்ந்துதான் பா.ஜ.க வளரும் என்று சொன்னார்கள். திராவிடக் கட்சிகளிலிருந்து நான்கு பேரை, பா.ஜ.க உள்ளே கொண்டு வந்தால்தான் வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இன்றைக்கு பா.ஜ.க-விலிருந்து ஆட்களைக் கூட்டிக்கொண்டுப் போனால்தான் திராவிடக் கட்சிகள் வளரும் என்ற நிலைமை தமிழ்நாட்டில் வந்திருக்கிறது. இது பா.ஜ.க-வின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் காட்டுகிறது!” என அண்ணாமலைப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

அதிமுக – பாஜக `மோதல்’

`நான் இப்படித்தான்; நான் இருக்கும்வரை கட்சியும் இப்படித்தான் இருக்கும்!’ – (மார்ச் 8, 2023)

அண்ணமலையின் இந்தப் பேச்சு அ.தி.மு.க மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்த, மறுநாள் மார்ச் 8-ம் தேதி கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “என்னுடைய பேருக்குப் பிறகு எம்.பி., எம்.எல்.ஏ என போட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வரவில்லை. பா.ஜ.க வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. இன்னொரு கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க வளரக் கூடாது. அப்படி வளர்ந்தாலும்கூட அது தொடராது. பா.ஜ.க தமிழகத்தில் தனக்குரிய இடத்தைக் கண்டுபிடித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்று அது வளர வேண்டும். நான் மதுரை, சென்னை இடங்களில் என்னுடைய கருத்தாக, என்ன பேசி இருக்கின்றேனோ அதுதான் என்னுடைய கருத்து. அதிலிருந்து ஒருபடி மேலும் கிடையாது. கீழும் கிடையாது. என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

அதிமுக- பாஜக தலைவர்கள்

மேலும், “வேறு வேறு கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள், ஏற்கெனவே ஒரு வளர்ந்த கட்சியில் இணைந்து தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க தொண்டர்கள் அவ்வாறு இல்லை. யாரும் போகாத பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள். எங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம். நான் இப்படித்தான் இருப்பேன். நான் இருக்கும்வரை கட்சியும் இப்படித்தான் இருக்கும். அரசியல் கட்சியில் சிலவற்றில் மேனேஜர்கள் இருக்கிறார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் ஒரு முடிவை எடுக்கும்போது துணிந்து எடுக்க வேண்டும். தவறு நடந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும். ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போன பிறகும், துணிந்து நின்று வென்றார்கள். ஒரு தலைவர் இப்படித்தான் நிற்பார்கள். நானும் அப்படிப்பட்ட பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை என் தாயார், ஜெயலலிதா அம்மையாரைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்தவர்கள். என்னுடைய மனைவி, ஜெயலலிதா அம்மையாரைவிட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தவர்!” என சர்ச்சைக்கு பதிலளிப்பதாகக்கூறி இன்னொரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்.

`கூட்டணி நீடித்தால் பதவியை ராஜினாமா செய்வேன்!’ – (மார்ச் 18, 2023)

அதேபோல, கடந்த மார்ச் 18-ம் தேதி சென்னை அமைந்தகரையில் தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே நம் கட்சியை வளர்க்க முடியும். வருகிற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை தலைமை எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளைச் செய்வேன்!” எனப் பேசியிருக்கிறார்.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி – பாஜக – அதிமுக

`கூண்டுக்கிளி பறப்பதற்கான நேரம் வந்துவிட்டது!’ (மார்ச் 25, 2023)

தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, “ஒரு கிளி 30 ஆண்டுகளாக கூண்டுக்குள்ளாகவே இருக்கிறது. அந்தக் கிளியை திறந்துவிட்டு பா.ஜ.க வந்துவிட்டது, வலிமையடைந்துவிட்டது என்று சொன்னால் அந்தக் கிளி யோசிக்கும். முப்பதாண்டுகளாக கூண்டுக்குள்ளேதான் இருக்கிறேன் இப்போது திடீரென வந்து கூண்டை திறந்துவிட்டு பறந்துபோ என்று சொன்னால் எனக்கு பறக்கத் தெரியாதே என்று கிளி சொல்கிறது. அதுதான் தமிழகத்தில் இப்போது ஆக்ரோஷமான உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கிளியால் பறக்க முடியும் என்று நம்புகிறேன். அந்த கூண்டு இப்போது திறக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன். எல்லா இடத்திலும் களம் மாறிவிட்டது. தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. கூண்டைவிட்டு வெளியில் வர நீங்கள் தயாராக வேண்டி இருக்கும். பறப்பதற்கு சக்தி இருப்பதாக நீங்கள் நம்புங்கள். நம்மால் முடியும் என்று நம்பிக்கை வந்துவிட்டால், புரட்சி பின்பு தானாக வரும். தமிழகத்தில் அரசியல் புரட்சிக்கான நேரம் இது. புதிய பாதை நமக்கான நேரம் வந்துவிட்டது. தமிழக பா.ஜ.க-வுக்கு ஒரு புதிய பாதை அமைக்கப்படுகிறது!” என்றார்.

அண்ணாமலை

`அடிபணிந்துபோக மாட்டேன், என் பதிலை நானே சொல்வேன்!’ – (செப்டம்பர் 17, 2023)

இந்த நிலையில், செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்தார். அது அ.தி.மு.க கூடாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு கடந்த 17-ம் தேதி கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பதிலளித்த அண்ணாமலை, அ.தி.மு.க தலைவர்களை சரமாரியாகத் தாக்கிப்பேசினார். மேலும், “யாரிடமும் கூனி, குனிந்து அடிபணிந்து போக வேண்டிய அவசியம் எனக்கும், பா.ஜ.க-வுக்கும் கிடையாது. இது சுய மரியாதை உள்ள கட்சி. கூட்டணி முக்கியம் என அ.தி.மு.க சொல்வதை ஏற்றுக்கொண்டால் இரு கட்சிகளையும் இணைத்துவிடலாமே… கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு அதிகாரத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க தனித்தன்மையுடன் 2026-ல் ஆட்சிக்கு வரும். மற்றவர்களை ஏவி பதில் சொல்பவன் நான் அல்ல. பதிலை நானே சொல்வேன்! அண்ணாதுரைக்கு ஆதரவாக வருபவர்கள் அண்ணாதுரை வழிப்படி நடந்து கொள்கிறார்களா?” எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகளால் `பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று கிளம்பிய அ.தி.மு.க தலைமை, கடந்த 25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை!’ என்று தீர்மானம் நிறைவேற்றி `நன்றி, மீண்டும் வராதீர்கள்’ என எக்ஸ் தளத்தில் போஸ்ட்டும் போட்டுவிட்டது. இந்த முடிவை சற்றும் எதிர்பாராத பா.ஜ.க தலைவர்கள், வயிற்றில் புளியைக் கரைத்த கதையாக ஸ்தம்பித்துவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

`நோ பாலிடிக்ஸ்; எல்லாம் தேசியத் தலைமை பேசிக்கும்!’ -(செப்டம்பர் 25, 2023)

இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டிருந்த அண்ணாமலையிடம், அ.தி.மு.க கூட்டணி முறிவு பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “கோயம்புத்தூரில் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறது. அதிகமாக பேசுவதற்கு நமக்கு நேரம் இல்லை. ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அ.தி.மு.க-வின் அறிக்கையைப் படித்தோம். தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசும். சரியான நேரத்தில் பேசும். நாங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ஃப்யூச்சரில் இதைப் பற்றி பேசுவோம்!” என நழுவினார். விடாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, “பாதயாத்தியின்போது நான் பாலிடிக்ஸ் பேசுவதில்லை! எல்லாவற்றுக்கும் ஒரு ப்ரோசிஜர் இருக்கிறது. தேசியத் தலைவர் இருக்கிறார். இது குறித்து தேசியத் தலைமை பேசும். பத்திரிகையாளர்களுக்கு நன்றி!” எனக் கூறிவிட்டு, நகர்ந்தார்.

ஒரு காலத்தில் `நான் இப்படித்தான், யார் பேச்சையும் கேட்கமாட்டேன், டெல்லிக்குச் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டேன்’ எனப் பேசிக்கொண்டிருந்தவர், `இனி எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான்’ என்ற ரீதியில் எஸ்கேப் ஆனதைக் குறிப்பிட்டு, நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.