கொழும்பு,
சீனாவின், ‘ஷி யான் 6’ என்ற ஆய்வு கப்பல் அடுத்த மாதம் (அக்டோபர்) இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாகவும், அங்கு சில நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா இத்தகைய ஆய்வு கப்பல்களை ஆராய்ச்சிகாக அனுப்புவதாக கூறினாலும் உண்மையில் அந்த கப்பல்கள் பிறநாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில் இலங்கைக்கு அனுப்பப்படும் உளவு கப்பல்கள் குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருவது குறித்து இலங்கையிடம் அமெரிக்கா கவலை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஐ.நா. பொதுசபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியை சந்தித்த அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி விக்டோரியா நுலாண்ட் சீன உளவு கப்பல் விவகாரம் குறித்து கவலை தெரிவித்தார். அப்போது இலங்கை ஒரு நடுநிலையான நாடு என்ற வகையில், வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நிலையான செயற்பாட்டு நடைமுறையை வகுத்துள்ளதாக விக்டோரியாவிடம் அலி சப்ரி விளக்கமளித்தார்” என கூறப்பட்டுள்ளது.