மொசூல், ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் உடல் கருகி பலியாகினர்; 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் நினேவா மாகாணத்தில் ஹம்தானியா என்னும் பகுதியில் கிறிஸ்துவர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர்.
இங்குள்ள திருமணஅரங்கு ஒன்றில் நேற்று கிறிஸ்துவ திருமணம் நடந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அரங்கின் மேல் மாடியில் பற்றிய தீ, சில நிமிடங்களில் அரங்கம் முழுதும் பரவியது.
மளமளவென எரிந்த தீயால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. இதனால், திருமண நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் தீயில் சிக்கியும், மூச்சுத் திணறியும் பரிதாபமாக பலியாகினர். குழந்தைகள் உட்பட காயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
இவர்களில், பெரும்பாலானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துஉள்ளது.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கும்படியும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement