ராஜ்கோட்,
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களான ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இருப்பினும் அவர்கள் இருவரும் முறையே 81 மற்றும் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த விராட்கோலி 56 ரன்களிலும், கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 48 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் ஜடேஜா சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியாக இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.