திட்டமிட்ட குற்றங்கள், வன்முறை… அதிகரிப்பு! கனடா மீது ஜெய்சங்கர் பகிரங்க புகார்| Organized crime, violence… on the rise! Jaishankars public complaint against Canada

நியூயார்க் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில், இந்தியா – கனடா இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ”கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிட்ட குற்றங்கள், வன்முறை, பயங்கரவாத செயல்கள் நடந்து வருகின்றன,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில், இந்திய ஏஜன்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் சமீபத்தில் கூறினார்.

இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றன.

ஆதரவு அளிக்கக் கூடாது

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டத்தில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அதில், ‘அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக் கூடாது’ என, அவர் கடுமையுடன் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில், வெளியுறவுக்கான கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், இந்தியா – கனடா பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:

கனடா பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே நாங்கள் பதிலளித்து விட்டோம்.

இது போன்ற கொலை செய்வது இந்தியாவின் கொள்கை அல்ல. இதில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக ஏதாவது குறிப்பிட்ட சிறிய ஆதாரம் இருந்தாலும் அதை கொடுக்கலாம். அதை, இந்தியா உரிய முறையில் கவனிக்கும் என தெரிவித்துள்ளோம்.

முன்னெச்சரிக்கை

எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லாமல் இது போன்ற புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில முக்கியமான அம்சங்களை பார்க்க வேண்டும்.

கடந்த சில ஆண்டு களாக கனடாவில், பிரிவினைவாத அமைப்புகளால் திட்டமிட்ட குற்றங்கள், வன்முறைகள், பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக, குறிப்பிட்ட தகவல்கள், ஆதாரங்கள், முன்னெச்சரிக்கைகளை, கனடாவுக்கு நாங்கள் வழங்கிஉள்ளோம்.

கனடாவில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள், அதன் தலைவர்கள் குறித்த தகவல்களையும் அளித்துள்ளோம். அந்தத் தலைவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளையும் அளித்துள்ளோம்.

கனடாவில் உள்ள நிலவரங்களை முழுமையாக பார்க்க வேண்டும். அங்கு சில அரசியல் நிர்ப்பந்தங்கள் உள்ளன. பயங்கரவாத அமைப்புகள் குறித்து நாம் குறிப்பிட்டால், தங்கள் தரப்பை நியாயப்படுத்தி கனடா பேசுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாபிலிருந்து அழைத்து வரப்படும் வாலிபர்கள்!

கனடாவில் இருந்து இயங்கி வரும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், தங்களுடைய அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்க புதிய முறையை பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.கனடாவில், 14 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதில், 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள். சீக்கியர்களில் சிலர், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், இந்தியாவுக்கு எதிரான பேரணிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு போதிய ஆதரவு இல்லாமல் காலிஸ்தான் பயங்கரவாதிகள் திண்டாடி வந்தனர்.இந்நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களை, வேலை தருவதாகக் கூறி, கனடாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கான விசா உள்ளிட்ட செலவுகளை பயங்கரவாதிகள் ஏற்றுள்ளனர்.தற்போது கனடாவில், 30க்கும் மேற்பட்ட குருத்வாராக்கள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி இந்த இளைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதைத் தவிர, கனடாவில் இருக்கும் சீக்கியர்களில் பணத் தேவை உள்ளவர்கள், மாணவர்களை ஆசை வார்த்தை கூறி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும் முயற்சியிலும் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.