புதுடெல்லி: அடுத்த வருடம் ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அனைத்து சமூக குருமார்கள் உள்ளிட்ட சுமார் 8,000 பேரை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் நான்கு மாதங்களில் முடித்து அடுத்த வருடம் ஜனவரியில் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, “முக்கியமாக இந்து மதத்தின் அனைத்து சமூக குருமார்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. 6,000 முதல் 8,000 வரையிலான எண்ணிக்கையில் பலரும் கோயில் விழாவில் கலந்துகொள்வார்கள்” என்றார். சர்வதேச நாடுகளின் மத குருமார்களையும் அழைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
2024 ஜனவரியில் 20 முதல் 24ஆம் தேதிக்கு இடையில் விழாநடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனும் கலந்து பேசி இதில் முடிவு எடுக்கப்பட உள்ளது. கோயிலை திறந்து வைக்க வருமாறு பிரதமர் மோடியை அழைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லிக்கு சென்று வந்தார்.
ராமர் கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு, அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 263 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.30,923 கோடி ஆகும்.
ராகுல் அயோத்தி பயணம்: காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி விரைவில் அயோத்தி செல்ல உள்ளார். அவர் அங்குள்ள சரயு நதியில் புனித நீராடிய பிறகு ராமரை தரிசிக்க உள்ளார். இவருடன் காங்கிரஸின் மூத்த தலைவர்களும் செல்ல உள்ளனர்.