திருமலை: `ஸ்ரீமான் அனந்தாழ்வான் திவ்ய சரிதம்’ எனும் தமிழாக்க நூலை ‘திஇந்து’ குழுமம் சார்பில் திருமலையில் தேவஸ்தான பெரிய ஜீயர் சுவாமிகள் நேற்று வெளியிட்டார்.
ஸ்ரீமான் அனந்தாழ்வான் தனதுகுருவான ராமானுஜரின் கட்டளையை ஏற்று திருமலைக்கு தனது கர்ப்பிணி மனைவியுடன் வந்து,குளங்களை வெட்டி, அழகிய பூங்காக்களை உருவாக்கி, ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பின்புறம் உள்ள பிருந்தாவனத்தில் மகிழ மரமாக தனதுவாழ்க்கையை சுவாமிக்கு அர்ப்பணம் செய்த மகான் ஆவார். கி.பி 1053-1138 வரை வாழ்ந்த ஸ்ரீமான் அனந்தாழ்வானின் திவ்ய சரிதம் குறித்து தெலுங்கில் வேங்கட ராமி ரெட்டி என்பவர் ஒரு புத்தகமாக தொகுத்து வழங்கி இருந்தார்.
இதனை ஹைதராபாத்தில் வசிக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராஜி ரகுநாதன் என்பவர் தற்போது தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்தப் புத்தகத்தை இந்து குழுமம் சார்பில்திருமலையில் உள்ள ஸ்ரீமான் அனந்தாழ்வானின் பிருந்தாவனத்தில் தேவஸ்தான பெரிய, சிறிய ஜீயர்கள் நேற்று வெளியிட்டனர். அப்போது பெரிய ஜீயர், “இப்போதைய இளைய தலைமுறையினர் இந்தப்புத்தகத்தை கட்டாயம் படித்து பயன்பெற வேண்டும்.. இது, குரு-சிஷ்யன் எனும் நிகரில்லா பந்தத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று அறிவுறுத்தினார்.
குரு பக்தி, தெய்வ பக்தி: புத்தகத்தின் மூல ஆசிரியரான வேங்கட ராமி ரெட்டி பேசியதாவது: ஸ்ரீமான் அனந்தாழ்வான் திவ்ய சரிதம் எனும் இந்த நூல் குரு பக்தியையும், தெய்வ பக்தியையும் விளக்குகிறது. திருமலைக்கு பலமுறை சுவாமி தரிசனத்துக்கு செல்லும் நாம் தரிசனம் முடிந்த பிறகு அடித்து பிடித்து வீடு வந்துசேர்ந்து விடுகிறோம். ஆனால் கோயிலுக்கு பின்புறம், அனந்தாழ்வான் தோட்டம் எனும் பெயரில்அவர் தொடங்கிய பிருந்தாவனத்தையும் அவர் மகிழ மரமாக அதே இடத்தில் காட்சி அளிப்பதையும் நம்மில் பலர் பார்க்க தவறி விடுகிறோம். இதனை படித்தபிறகாவது அனந்தாழ்வானின் தோட்டத்துக்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்த ராஜி ரகுநாதன், இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்கிற எண்ணம் துளியும் ஏற்படாதவாறு மூல நூலே தமிழ் தானோ என்பது போல் மொழி பெயர்த்துள்ளார். இவ்வாறு வேங்கட ராமி ரெட்டி பேசினார்.
நூல் வெளியீட்டு விழாவில், ஸ்ரீமான் அனந்தாழ்வானின் 27-வது வாரிசான டி.ஏ.பி ரங்காச்சாரியார், தி இந்து பிசினெஸ் லைன் ஆசிரியர் ரகுவீர் ஸ்ரீநிவாசன், விற்பனை மற்றும் விநியோக பிரிவின் துணைத் தலைவர் ஸ்ரீதர் அர்னாலா, சிறப்பு பதிப்பு பிரிவின் பொறுப்பாளர் ஆர். ஸ்ரீநிவாசன், ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களின் க்ளஸ்டர் ஹெட் எஸ்.டி.டி. ராவ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவுற்ற மறுநாள் ஸ்ரீமான் அனந்தாழ்வான் தோட்டத்துக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் வருகை புரிந்து சிறிது நேரம் முன்னும், பின்னுமாய் விளையாடி விட்டு செல்வார். இதனை ‘பாக் சவாரி’ என்று அழைப்பார்கள். இது இன்றளவும் நடைபெறுகிறது. இந்நாளில் நேற்று இப்புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.