மும்பையில் 28 வயது நபர் ஒருவர் கூகுளில், ‘தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி’ என இன்டர்நெட்டில் தேடியிருக்கிறார். அதையடுத்து, உடனடியாக இது குறித்த தகவல் இன்டெர்போலுக்குத் தெரியவர, அவர்கள் துரிதமாக மும்பை குற்றப்பிரிவு போலீஸாருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து அந்த நபர் இத்தகைய இன்டர்நெட் தேடுதலை மேற்கொண்ட இரண்டு மணி நேரத்தில், போலீஸார் அவரைக் கண்டுபிடித்து, அவர் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், ஒரு நபர் இணையத்தில் தற்கொலை செய்வதற்கான சிறந்த வழியை தேடுவதாக இன்டர்போலிலிருந்து மும்பை போலீஸாருக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
மேலும் அந்த நபர் தனது இணையத் தேடலின்போது பயன்படுத்திய மொபைல் எண்ணையும் இன்டர்போல் பகிர்ந்தது. இதனை அடிப்படையாக வைத்து குற்றப்பிரிவு அதிகாரிகள், மொபைல் எண்ணைப் பற்றிய தொழில்நுட்ப நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்த நபர் மலாட்டின் மல்வானி பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் உடனடியாக அந்த நபரை மீட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய குற்றப்பிரிவு அதிகாரிகள், “இரண்டு மணி நேரத்துக்குள், எங்கள் குழு அந்த நபரைக் கண்டுபிடித்து, குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தது. ஏன் இணையத்தில் ‘தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி’ பற்றிய தகவல்களை தேடுகிறீர்கள் என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது, `எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாய் ஒரு குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மேலும் அவரது ஜாமீனுக்கான சட்டச் செலவுகளுக்கு என்னால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நான் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தேன். எனது கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, டிப்ளமோ படித்துவிட்டு, மீரா ரோட்டிலுள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, அந்த வேலையையும் இழந்தேன்.
பின்னர் பல இடங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. நிதி நெருக்கடி வேறு. அதனால் கடந்த சில நாள்களாகவே நான் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தேன். அதன் விளைவாகவே இணையத்தில் தற்கொலை செய்துகொள்வது குறித்து தேடினேன்’ என்றார். அதையடுத்து நாங்கள் அந்த நபருக்கு ஆலோசனை வழங்கி, வேலைக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து, அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தோம்” எனக் கூறினர்.