Siddharth: காவிரி விவகாரம்; கர்நாடகாவில் சித்தார்த் பேசவிடாமல் வெளியேற்றம் – பின்னணி என்ன?

தமிழ்நாட்டிற்கும் – கர்நாடகாவிற்குமான காவிரி பிரச்னை நீண்டுகொண்டே இருக்கிறது.

நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி செப்டம்பர் 14-ம் தேதிக்குள் 103.5 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டுக்குக் கர்நாடகா தந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 38.4 டி.எம்.சி மட்டுமே தந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க உபரிநீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்டுக் கணக்குக் காட்டும் கர்நாடகா, இடர்ப்பாடான காலங்களில் கிடைக்கும் நீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. இதற்குத் தமிழ்நாடு அரசும் நீதிமன்றம் வழியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்குரிய காவிரிநீரைத் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

சித்தா

இந்நிலையில் சித்தார்த் நடிப்பில், S.U.அருண் குமாரின் இயக்கத்தில் உருவான ‘சித்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இதையொட்டி கர்நாடகா பெங்களூரில் நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் நடிகர் சித்தார்த்.

இந்நிகழ்ச்சி நடந்த அரங்கில் நுழைந்த சிலர், சித்தார்த்தைப் பேசவிடாமல் தடுத்து, “காவிரி நீர் தமிழகத்திற்குச் செல்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் இங்குப் போராடுகிறோம். ஆனால், நீங்கள் இங்குத் தமிழ்ப் படத்தை புரொமோஷன் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்…” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு நிகழ்ச்சியை நடக்கவிடாமல் இடைநிறுத்தினர்.

மேலும், சித்தார்த்தைப் பேசவிடாமல் அங்கிருந்து வெளியேறும்படி செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“இது முற்றிலும் தவறான செயல். கண்டிக்கத்தக்கது. எல்லா மொழிப்படமும் எல்லா மாநிலங்களிலும் வெளியாகிறது. இதில் இனவெறி அரசியலைக் காட்ட வேண்டாம். மொழி கடந்து மனிதர்களாக நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கும். சில இனவெறி அரசியல்வாதிகள் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்” என்று பலரும் இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.