இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மைத்தேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ம் தேதி பெரும் கலவரமாக வெடித்தது. இதில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ம் தேதி குகி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு சடலங்களாகக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை. இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், 19 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிறபகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நடைபெற்ற வன்முறைகளின் போது பல மாவட்டங்களில் பதற்றமான பகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் (19 போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து) ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் (ஏஎஃப்எஸ்பிஏ) அமல்படுத்தப்படும் என்றும், அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இது அமலில் இருக்கும் என்றும் மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரசட்டம் என்பது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் மாநிலப் படைகள், துணை ராணுவப் படைகளுக்கு ‘‘பதற்றமான பகுதிகள்’’ என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டமாகும்.
இனி, மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, 19 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலம் முழுமைக்கும் ஆளுநரே உத்தரவுகளை பிறப்பிப்பார். இது அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.