ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழில் கடந்த செப்.,15ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் கிடைத்ததால், வசூலும் ரூ.60 கோடிக்கு மேல் குவித்தது. ஹிந்தியில் இன்று (செப்.,28) வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களாக பணம் செலுத்திய வங்கி கணக்கு விபரங்களையும் விஷால் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை, ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழல் இருப்பதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக சென்சார் போர்டின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அதாவது, சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும் மற்றும் படத்திற்கு சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சமும் லஞ்சமாக கேட்டனர்.

எனது சினிமா வாழ்க்கையில் இந்த நிலையை நான் சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட இடைத்தரகர் மேனகாவுக்கு பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை மஹாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா??? வேறு வழி இல்லை, அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரத்தை வெளியிடுகிறேன். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சினிமா துறையில் முக்கியமான சென்சார் போர்டில் லஞ்சம் பெற்றதாக விஷால் தெரிவித்த குற்றச்சாட்டால், திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.