புதுடெல்லி: விமானப் படையில் பணியாற்றி வந்த விமானப் படை அதிகாரி ஒருவர் 2002-ம் ஆண்டு காஷ்மீரில் `ஆபரேஷன் பராக்ரம்’ என்ற பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, சாம்பா பகுதியில் உள்ள 171 என்ற ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது அவருக்கு தவறுதலாக எச்ஐவி கிருமியுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் அவர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு எய்ட்ஸ் நோயாளியாக மாறினார். இதனால் அவருக்கு ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டது. 2014-ல் ராணுவ மருத்துவமனையில் ரத்தம் செலுத்தும்போது எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது அவருக்குத் தெரியவந்தது.
இந்நிலையில் 2016-ல் அவர் ராணுவப் பணியில் தொடர அனுமதியும் மறுக்கப்பட்டது. அவருக்கான ஓய்வூதியப் பலன்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட
அநீதி தொடர்பாக அவர் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தில் (என்சிடிஆர்சி) வழக்கு தொடர்ந்தார். அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது: இந்த சம்பவத்துக்கு இந்திய ராணுவமும், விமானப்படையும் பொறுப்பேற்க வேண்டும். ராணுவத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து அரசு அதிகாரிகள், பணியாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு தரத்தையும், சிகிச்சையையும் அளிப்பதை உறுதி செய்ய
வேண்டும். தரமற்ற ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக முயன்றபோது அவர் அலட்சியம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, ராணுவமும், விமானப்படையும் இணைந்து அவருக்கு ரூ.1.54 கோடியை இழப்பீடாக அடுத்த 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். மேலும் அவரது ஓய்வூதியப் பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.