சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடை பின்புறம் உள்ள தகர செட்டில் மாலை 5:30 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தீயானது கடைக்கும் பரவி பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டே இருந்ததாலும், கடைக்குள் செல்ல முடியாததாலும் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்ட கடையை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இருப்பதால் தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
வெடிவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் ரூ.20 லட்சத்திற்கு அதிகமான பட்டாசுகள் சேதமடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.