புதுச்சேரி: வருகின்ற 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 375 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நல்ல காலக்கட்டத்தை நோக்கி நாம் இருக்கின்றோம் என்று புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக 8 ஆண்டுகள் இருந்த சாமிநாதன் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்பி நியமிக்கப்பட்டார். அவரை புதுச்சேரி மாநில பாஜக தலைவராக அறிவித்து கட்சியின் தேசியத் தலைவர் நட்டா கடந்த 25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து செல்வகணபதி எம்பி தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்வு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. தலைவராக பொறுபேற்க செல்வகணபதி எம்பி லாஸ்பேட்டையில் இருந்து திறந்த வேனில் முக்கிய சாலைகள் வழியாக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அவருக்கு மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மூத்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கட்சியின் கொடியை செல்வகணபதி எம்பியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். இதையடுத்து தலைவராக செல்வகணபதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ சரணவன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் புதுச்சேரி பாஜக தலைவர் செல்வகணபதி எம்பி பேசியதாவது: புதுச்சேரி மாநில பாஜக தலைவராக என்னை நியமித்த பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் வளர்ச்சிபெற பாடுபடுவேன். தற்போது நாம் முக்கிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். வருகின்ற 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 375 உறுப்பினர்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நல்ல காலக்கட்டத்தை நோக்கி நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
நம்முடைய திட்டம், கடமை உள்ளிட்டவைகளை யோசிக்கும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். புதுச்சேரியில் நிச்சயமாக நாடாளுமன்ற வேட்பாளர் பாஜகவைச் சேர்ந்தவர் தான். அவரை நாம் 75 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றிபெற செய்ய வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.