ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியின் 6-வது நாளான இன்று டேபிள் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீரர்கள் மானவ் விகாஷ்-மனுஷ் ஷா ஜோடி 3-1 என்ற கணக்கில் செட்களை கைப்பற்றி மாலத்தீவின் மூசா அகமது-முகமது இஸ்மாயில் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதே போல பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32 சுற்றில், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, நேபாள வீராங்கனை நபிதா ஷ்ரேஸ்தாவுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மணிகா பத்ரா, முதல் நான்கு செட்களை கைப்பற்றி நபிதா ஷ்ரேஸ்தாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, வட கொரியாவின் சாங்யோங் பியோனிடம் முதல் நான்கு செட்களை இழந்து 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில், இந்திய வீரர்கள் ஹர்மீத் தேசாய்-ஸ்ரீஜா அகுலா ஜோடி 0-3 என்ற கணக்கில் தாய்லாந்தின் பக்பூம் சங்குவான்சின்-பரணாங் ஜோடியிடம் வீழ்ந்தது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன்-மணிகா பத்ரா ஜோடி 2-3 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஜீ யூ கிளாரன்ஸ்-ஜியான் ஜெங் ஜோடியிடம் தோல்வியடைந்தது. சிறப்பாக விளையாடி முதல் இரண்டு செட்களை கைப்பற்றிய சத்தியன்-மணிகா ஜோடி தொடர்ச்சியாக அடுத்த 3 செட்களை இழந்து தோல்வியடைந்தது.