ஒட்டவா,-நாஜி படைப் பிரிவின் முன்னாள் அதிகாரி கனடா பார்லிமென்டில் கவுரவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் வட அமெரிக்க நாடான கனடாவில் சுற்றுப் பயணம் செய்தார்.
அப்போது அவருடன், உக்ரேனியரான நாஜிப் படைகளின் முன்னாள் அதிகாரி யாரோஸ்லாவ் ஹன்கா, 98, என்பவரும் வந்திருந்தார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஹன்காவிற்கு கனடா பார்லிமென்டில் உரிய கவுரவம் அளிக்கப்பட்டது. ஜெலன்ஸ்கி, ட்ரூடோ உட்பட அங்கிருந்த எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, ஹன்காவுக்கு கைதட்டி மரியாதை செலுத்தினர்.
இது, யூத சமூக மக்களுக்கு எதிரானது என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவ்ரே குற்றஞ்சாட்டினார்.
அவர் கூறுகையில், ‘உக்ரைன் அதிபரின் வருகையின்போது நாஜி படையின் முன்னாள் அதிகாரிக்கு பார்லி.,யின் கீழவையில் கவுரவம் செய்யப்பட்டுள்ளது, பிரதமரின் மிகப் பெரிய தவறு’ என்றார்.
சர்ச்சையைத் தொடர்ந்து, ஹன்கா கவுரவிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு சபாநாயகர் ஆன்டனி ரோட்டா சமீபத்தில் பதவி விலகினார்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படையில் இருந்த நபருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது பார்லி.,யையும், கனடா மக்களையும் ஆழமாக சங்கடத்தில் தள்ளிய ஓர் தவறு.
யூதர்களுக்கு எதிரான நாஜிக்களின் இனஅழிப்பில் இறந்த கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளுக்கு எதிரான செயல் என்பதை உணர்கிறோம்.
சூழலை உணராமல் சபையில் இருந்த நாங்கள் அனைவரும், நாஜி வீரருக்கு ஆதரவாக எழுந்து நின்று கைதட்டி கவுரவித்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஹிட்லரின் நாஜி படைகள் ஏராளமான யூதர்களை கொன்று குவித்தன.
இதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் கடுமையான நாஜி எதிர்ப்பு மனநிலை உள்ள நிலையில், அப்படையில் இருந்தவருக்கு கனடா பார்லிமென்டில் வரவேற்பு தரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்