கும்பகோணம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானதையொட்டி, கும்பகோணத்தில் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98). இவர் 1935-ம் ஆண்டு முதல் 1938-ம் ஆண்டு வரை 6-ம், 7-ம், 8-ம் வகுப்புகளை நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியிலும், 1938-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டு வரை 9-ம் மற்றும் 10-ம் வகுப்பைச் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் கல்லூரி படிப்பை அரசு ஆடவர் கல்லூரியில் படித்துள்ளார்.
இவர் வேளாண்மைத் துறையில் பல்வேறு சாதனைகள் செய்தவர். பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு என கூறிய இவர் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி அவர் படித்த பள்ளியான நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளி தலைமையாசிரியர் சி.மனோகரன் தலைமையில் ஆசிரியர்கள் எஸ்.கே.பாலசுப்பிரமணியன், ஆர்.அருணராஜவேல், வி.மோகன், ஜெ.வினோத் சேவியர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது ஆத்மா சாந்தியடைய மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.