காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் 'ஜிலாண்டியா'… புவியியலாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

வெல்லிங்டன்,

தண்ணீரால் சூழப்பட்ட நமது பூமியின் நிலப்பரப்பு, மொத்தம் 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 8-வதாக ஒரு கண்டம் பூமியில் இருந்ததாகவும், ‘கடல்கோள்’ எனப்படும் ஒரு பேரழிவு காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்த 8-வது கண்டம் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் நீண்ட காலமாக புவியியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 375 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் காணாமால் போன 8-வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். அந்த 8-வது கண்டத்தின் ஒரு பகுதி தான் கடந்த 1642-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நியூசிலாந்து என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வரைப்படத்தையும் விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதாவது, 8-வது கண்டத்தின் 94 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில் மூழ்கிவிட்ட நிலையில், மேலே இருக்கும் 6 சதவீத நிலப்பரப்பு தான் தற்போது நாம் காணும் நியூசிலாந்து என்று புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மர்மங்கள் நிறைந்த பசிபிக் பெருங்கடலில், சுமார் 3,500 அடி ஆழத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒளிந்திருந்த இந்த கண்டத்திற்கு ‘ஜிலாண்டியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்திய துணைக்கண்டம் ஆகியவை ஒன்று சேர்ந்து ‘கோண்ட்வானா’ எனப்படும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும், அந்த நிலப்பரப்பு தனித்தனியாக நகர்ந்து பல்வேறு கண்டங்களாக பிரிந்தது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி நகர்ந்த கண்டங்களில் ஒன்று தான் இந்த ‘ஜிலாண்டியா’ என்றும், இந்த கண்டத்தின் மொத்த பரப்பளவு சுமார் 5 மில்லியன் சதுர கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘ஜிலாண்டியா’ கண்டம் மடகாஸ்கரை விட சுமார் 6 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.