மதுரா: உ.பி.யில் ஊழியரின் கவனக்குறைவால் மின்சார ரயில் நகர்ந்து பிளாட்பாரத்தில் ஏறியது.
உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மின்சார ரயில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும், அந்த ரயிலை இயக்கிய டிரைவரும் பணியை முடித்து விட்டு ரயில் இன்ஜினில் இருந்து இறங்கினார். அதன் சாவியை எடுத்து வருவதற்காக அந்த ரயிலில் ஏறிய ஊழியர் சச்சின் தனது தோளில் இருந்து இறக்கிய பையை, ரயிலை இயக்கும் ‘த்ராட்டில்’ அருகே வைத்து விட்டு, தனக்கு வந்த வீடியோ கால் அழைப்பில் மூழ்கினார்.
பையின் அழுத்தம் காரணமாக ரயில் இன்ஜின் த்ராட்டில் முன்பக்கம் சென்று விட்டது. இதனால் ரயில் நகர்ந்து தடம்புரண்டு பிளாட்பாரத்தில் ஏறியது. இதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரயில் இன்ஜின் கேபினில் இருந்த கேமிரா காட்சிகளை ஆய்வுசெய்ததில், சச்சின் த்ராட்டில் அருகே பையை வைத்துவிட்டு போன் பேசிய காட்சிகள் பதிவாகியிருந்தன. பை அழுத்தம் காரணமாக ரயில் இன்ஜின் த்ராட்டில் முன்பக்கம் சென்று விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர் சச்சின் உட்பட5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சச்சின் மதுபோதையில் ரயிலில் ஏறினாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. அவரது ரத்த மாதிரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.