சென்னை: பல்வேறு அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்துவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 10 சதவீத ரயில் நிலையங்களில்கூட இன்னும் கண்காணி்ப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து ரயில் நிலையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ளமுக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத்தில் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், 2024-25-ம்ஆண்டுக்குள் எஞ்சிய ரயில் நிலையங்களில் கண்காணி்ப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஒரு இளம்பெண் ரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பிறகும், தெற்கு ரயி்ல்வே நிர்வாகத்துக்கு பயணிகளின் நலனில் அக்கறை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் அதிருப்தி: மேலும், ‘‘பல்வேறு அசம்பாவிதங்கள் ரயில் நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த ஏழரை ஆண்டுகளில் வெறும்10 சதவீதம் ரயில் நிலையங்களில்கூட முழுமையாக கண்காணி்ப்புகேமரா பொருத்தப்பட வில்லை. கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த இவ்வளவு காலதாமதம் செய்வது ஏன்?’’ என அதிருப்தி தெரிவித்ததோடு, இதற்கு நிதி நிலைமையைக் காரணம் காட்டக்கூடாதுஎனக்கூறி விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.