புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஸ் அலி ஆகியோர் மீதான புகார்களை உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற போது மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஸ் அலியை தீவிரவாதி என்று கூறி தகாத வார்த்தைகளால், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி திட்டினார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அவையில் எம்.பி ரமேஷ் பிதாரி அநாகரீகமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவையில் ரமேஷ் பிதூரி பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் குறுக்கிட்ட எம்.பி டேனிஸ் அலி, ரமேஷ் பிதூரியை ஆவேசப்பட தூண்டினார் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பலரும் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த புகார்களை பாஜக எம்.பி சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்துள்ளார்.