காவிரி எங்களுடையதே… – பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம்

தமிழ், தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து பேரும், பணமும், புகழும் பெற்றவர் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ். மற்ற மொழிப் படங்களில் நடித்தாலும் கர்நாடகாவுக்கும், கன்னடத்திற்கும் மட்டுமே தன்னுடைய ஆதரவு என்பதை நிரூபித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கருத்துக்களைப் பதிவிட்டு தன்னை ஒரு நியாயமானவர் என காட்டிக் கொண்டவர். அவரது இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழ் நடிகர் சித்தார்த் நடிப்பு மற்றும் தயாரிப்பில் நேற்று வெளியான 'சித்தா' படத்தின் கன்னட டப்பிங் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று பெங்களூருவில் நடத்தினார். அப்போது கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் அரங்கிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றினர். அதற்கு வருத்தம் தெரிவித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார் பிரகாஷ்ராஜ். ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்த டுவீட்டில் காவிரி விவகாரம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

அதே சமயம் கன்னடத்தில் அவர் பதிவிட்டிருந்த டுவீட்டில், “காவிரி எங்களுடையதே… ஆம், எங்களுடையதே” என்றுதான் ஆரம்பித்துள்ளார். மேலும், காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசைப் பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காமல், மத்திய அரசைப் பற்றி மட்டுமே குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் ஒரு மாதிரி டுவீட், ஆங்கிலத்தில் வேறு மாதிரி டுவீட் எனப் போட்டு அவர் எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்பதைக் காட்டியுள்ளார். கன்னடத்தில் டுவீட் போட்டாலும் அதை மொழி மாற்றம் செய்து புரிந்து கொள்வார்களே என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார்.

காவிரிக்கு ஆதரவாக கர்நாடகாவுக்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களையும், தமிழக விவசாயிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு தமிழ் நடிகரும் இதுவரை வாய் திறக்கவில்லை. தற்போது தனுஷ் இயக்கி வரும் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.