காண்ட்ராக்டர் கொலை மிரட்டல் விடுக்கிறார் : பாபி சிம்ஹா குற்றச்சாட்டு

கொடைக்கானலில் உள்ள வில்பட்டி ஊராட்சி, பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா தனது பெற்றோருக்காக வீடு கட்டி வருகிறார். இதை கட்டுவதற்கு கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த ஜமீர் என்பவரிடம் காண்ட்ராக்ட் கொடுத்துள்ளார். இதற்காக பாபி சிம்ஹா ஒரு கோடியே 30 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கூடுதல் பணம் கேட்க ரூ.1.70 கோடிக்கு பணம் தந்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் வந்த பாபி சிம்ஹா நிருபர்களிடம் கூறியதாவது: ஜமீருக்கு வீடு கட்ட 1.70 கோடி கொடுத்த அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. கூடுதலாக பணம் கேட்டதால் ஏற்கனவே செலவு செய்த பில் தொகையை ஒப்படைத்து விடுமாறு கூறினேன். அன்றிலிருந்து அவர் பல்வேறு காரணங்களை கூறி பணிகளை நிறுத்தி விட்டார்.

வீட்டை உறுதியாக கட்டாமல் சினிமா ஷெட் போல கட்டியுள்ளார். இதனுடைய அடித்தளம் முதல் அனைத்துப் பணிகளும் தரமற்ற நிலையில் உள்ளது. வேறு ஒரு பொறியாளரை கொண்டு ஆய்வு செய்தேன். அவர் இந்த வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என கூறினார். என்னை ஏமாற்றி பணத்தை பெற்றதோடு, நான் போலி பட்டா வைத்து விதிமுறை மீறி வீடு கட்டியதாக என் மீதே குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

வீடு கட்ட ஒப்பந்தம் பெற்றவர்தான் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டிடங்களை கட்டவேண்டும். இங்கு 30 ஆண்டுகளாக வசித்து வரும் எனக்கே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என் போன்றவர்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும். என்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.