வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் புதிய தலைவராக, மைசூரை சேர்ந்த, ‘தி பிரின்ட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் கே.என்.சாந்த் குமார், 62, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.டி.ஐ., எனப்படும், ‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’ செய்தி நிறுவன இயக்குனர்களின் ஆண்டு கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், பி.டி.ஐ.,யின் புதிய தலைவராக, கே.என்.சாந்த் குமார் தேர்வு செய்யப்பட்டார்.இந்த பதவியை, ‘ஆனந்த பஜார் பத்திரிகா’வின் அவீக் சர்க்கார் கடந்த இரண்டு ஆண்டுகளாக வகித்து வந்தார்.கர்நாடகாவின் மைசூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘தி பிரின்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை சேர்ந்த சாந்த் குமார், 1983 முதல், அந்நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இந்த நிறுவனம், ஆங்கிலத்தில், ‘டெக்கான் ஹெரால்டு’ கன்னடத்தில், ‘பிரஜாவாணி, சுதா, மயூரா’ நாளிதழ்களை வெளியிட்டு வருகிறது.
ஏ.பி.சி., எனப்படும் பத்திரிகை விற்பனை தணிக்கை அமைப்பின் தலைவராகவும், ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினராகவும் கடந்த, 20 ஆண்டுகளாக சாந்த் குமார் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2013 – 14ல், பி.டி.ஐ., தலைவராக பதவி வகித்த சாந்த் குமார், தற்போது இரண்டாவது முறையாக அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழின் தலைமை செயல் அதிகாரியான பிரவீன் சோமேஷ்வர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ‘பெப்சி கோ’ உட்பட, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் ஆசிய அளவிலான தலைமை பொறுப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார்.
இவர்கள் இருவரை தவிர, ‘தினமலர்’ நாளிதழின் இல.ஆதிமூலம், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் வினீத் ஜெயின், ‘தி ஹிந்து’வின் என்.ரவி, ‘தி எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் விவேக் கோயங்கா, முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் உட்பட, 16 பேர் பி.டி.ஐ., உறுப்பினர்களாக உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement