அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு மாத கால அளவுக்கு பெய்ய வேண்டிய கனமழை, வெள்ளிக்கிழமை காலை மூன்று மணிநேரத்துக்கும் கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புரூக்ளின் பகுதியில் மட்டும் சுமார் 4 அங்குலத்துக்கு மழை நீர் சேர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் விடுத்துள்ள செய்தியில், “நியூயார்க் நகரில் ஆபத்தான வானிலை நிலை நிலவி வருகிறது. அது இன்னும் முடிவடையவில்லை. எனவே மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரங்க நடைபாதைகளில் வெள்ளநீர் புகுந்திருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அவசர நிலை அறிவிப்பு: கனமழை நாளை வரை நீடிக்கும் என வானிலை நிலவரங்கள் தெரிவித்திருப்பதால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அச்சுறுத்தல், வடகிழக்கு பகுதி முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்களை பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கடுமையான வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.