கோட்டயம்:கேரளாவில் நாய்களை ஏவி போலீசாரை கடிக்கவிட்டு தப்பி ஓடிய போதை பொருள் வியாபாரியை, அம்மாநில போலீசார் தமிழகத்தில் கைது செய்தனர்.
கேரளாவின் கோட்டயம் மாவட்ட போலீசின் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு, கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவர் போதை பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சமீபத்தில் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து, அவரது வீட்டுக்கு சோதனைக்குச் சென்றனர்.
நாய்களை பழக்கும் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி, அந்த நபர் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்வது தெரிய வந்தது.
அவரது வீட்டுக்குள் போலீசார் நுழைந்தபோது, 13க்கும் மேற்பட்ட நாய்கள் போலீசாரை சுற்றி வளைத்தன. கடுமையாக போராடிய போலீசார், அந்த நாய்களின் கடிகளில் இருந்து தப்பினர்.
இதற்குள், அந்த போதை பொருள் வியாபாரி தப்பி ஓடிவிட்டார். போலீசார் நடத்திய சோதனையில், அந்த வீட்டில் 17 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, தப்பி ஓடிய அந்த நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர், தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தமிழகத்திற்கு விரைந்த தனிப்படையினர், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த போதை பொருள் வியாபாரியை கைது செய்தனர்.
பின், கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அந்த நபரின் பெயர் ராபின், 29, என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement