திருவனந்தபுரம்:கேரள அரசு லாட்டரி நிறுவனம், ஓணம் பண்டிகை பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன. டிக்கெட் விலை 500 ரூபாய். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற குலுக்கலில், கோவை மாவட்ட எல்லையான கேரளா, வாளையாரில் ஒரு கடையில் விற்பனையான டிக்கெட்டுக்கு 25 கோடி ரூபாய் கிடைத்தது.
திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜன் உட்பட நான்கு பேர் எடுத்த டிக்கெட்டிற்கு இந்த பரிசு விழுந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில் பரிசுக்குரிய டிக்கெட்டை ஒப்படைத்தனர்.
பொதுவாக, கேரள லாட்டரியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு கிடைத்தால், லாட்டரி சீட்டு எப்படி கிடைத்தது; கேரளா வந்தபோது வாங்கினரா; எதற்காக வந்தனர் என்பதற்கு உரிய ஆவணங்களுடன் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவை பரிசோதித்து உறுதி செய்யப்பட்ட பிறகே பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அம்புரோஸ் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பிளாக்கில் விற்பனை செய்த டிக்கெட்டிற்கு, 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளதால் அந்த பணத்தை அவர்களுக்கு வழங்கக் கூடாது.
‘அதை சமூக சேவைக்கு பயன்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பரிசுக்குரிய டிக்கெட்டை வாங்கிய நான்கு பேரும், கேரளாவில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஒருவரை சந்திக்க வந்தபோது, டிக்கெட் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
கேரள லாட்டரி துறை அதிகாரிகள் கூறுகையில் ‘உண்மையை உறுதி செய்த பிறகே பரிசுத்தொகை வழங்கப்படும்’ என, தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement