சென்னை: தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கத் தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் நிறுவனம்உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மக்கும் தன்மையற்றவை. இவற்றை முறையாகச் சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும்செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கும் பால் பாக்கெட்டுகளை கையாள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரமாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அதில் 7 சதவீதம் ஆவின் பால் பாக்கெட்டுகளாகும். இந்த பிளாஸ்டிக் கழிவை மறுசுழற்சி செய்வதில்லை.
எனவே, சமூகத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்கத் தடை விதிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள், ஆவின் நிர்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனர். பின்னர், மனுமீதான விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.