வெளியேறிய அதிமுக:
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது `நாங்கள் தான் எதிர்க்கட்சி’ என்று சொல்லி பலமுறை அதிமுகவைச் சீண்டிக்கொண்டிருந்தது பாஜக. அதற்கு அந்தந்த சமயத்திலும் அதிமுக சார்பிலும் தக்க பதிலடி கொடுத்து வந்தார்கள். அதிமுக – தமிழக பாஜக-வுக்கிடையே நீண்ட நாள்களாக ஒரு பனிப்போர் நிலவிக்கொண்டேதான் இருந்தது. அதிலும் அண்மைக் காலங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் மூத்த தலைவர்களை விமர்சனம் செய்தது அந்த கட்சி தொண்டர்களை ஆத்திரமடைய வைத்தது. இந்த சுழலில் சமீபத்தில் அண்ணாமலை, அண்ணா குறித்துப் பேசிய கருத்து அதிமுக-வினரை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.
இதனையடுத்து, சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மொத்தமாக விலகிக் கொள்வதாக அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அதிமுக தலைமை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த மிகப்பெரிய கட்சி வெளியேறியது தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த தாக்கம் அடங்குவதற்குள் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, `இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். இது சமரச முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாஜக தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.
கொண்டாட்டத்தில் அதிமுக:
பாஜக தேசிய தலைவர்களுடனும், தலைமையுடனும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவருமே மிகவும் நெருக்கமாகவே இருந்தனர். டெல்லி பாஜக தலைமையுடன் அதிமுக தலைமையும் ஒத்துப்போனது. ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல், முரண்பாடுகள் மட்டுமே இந்த கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறன. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைமை அறிவித்தவுடனே அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தலைமை ஏற்றுள்ளது என்று சொல்லி ரத்தத்தின் ரத்தங்கள் குதூகலிப்படைந்தார்கள். பாஜகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அதிமுக. அடுத்தபடியாக வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இப்போதே கட்டமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது அதிமுக. ‘வரும் தேர்தலில் அதிமுக கட்டமைக்கப்போகும் தேர்தல் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா. இதனை எதிர்கொள்ள திமுக என்ன திட்டமிருக்கிறது’ என்பதே தற்போதைய அரசியல் பிரதான பேசுபொருளாகியிருக்கிறது.
திமுக-வுக்கு நெருக்கடி:
கூட்டணி முறிவு விவகாரத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது தொடர்பாகவும், இது திமுகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாகவும் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். “அதிமுக-வைப் பொறுத்தவரை இவ்வளவு ஆண்டுகள் பாஜகவுடன் மிகுந்த நெருக்கத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்போது கூட அமித் ஷாவுக்காக ஆதரவு தெரிவித்தோம் என்று காரணம் சொன்னார்கள். அதேபோல, பாஜக-வுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் வந்தபோதும் அதற்கு ஏதாவது காரணம் சொல்லி விமர்சனம் எதுவும் சொல்லாமல் சமாளித்து வந்தார்கள். தற்போது கூட்டணி இல்லை என்று ஆன நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கச் செல்லும்போது 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசைக் குறை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். அதனை அதிமுக செய்யுமா என்பது சந்தேகம்தான். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவைக் குறை சொல்லி வாக்கு கேட்டாலும் அது எந்த அளவுக்கு எடுபடும் என்பதும் கேள்விதான்.
2024-ம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும், 2026-ம் ஆண்டு தேர்தல்தான் அதிமுகவுக்கு மிக முக்கியமான ஒன்று. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களை வென்றால் கூட அது அதிமுகவுக்குப் பெரிய வெற்றியாகவே இருக்கும். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியிலிருந்த காரணத்தினால் பல சிறிய காட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயக்கம் காட்டின. தற்போது அந்த தயக்கத்துக்கான காரணத்தைச் சரிசெய்து வைத்திருக்கிறது அதிமுக. இதனால், மற்ற கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் முன்பு கேட்டதை விட அதிக தொகுதிகளைக் கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படி திமுக தர மறுக்கும் நிலையில் அந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த கூட்டணி முறிவு திமுகவுக்கு சிறிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக என இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உள்ள ஒரு சில தொகுதிகள் உள்ளன. அங்கு வாக்குகள் பிரியும். அது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும்” என்றார்கள்.
மெகா கூட்டணி:
அதிமுக-வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம், “அதிமுக – பாஜக கூட்டணி முறிவு மற்றவர்களை விட திமுகவையும், திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணன் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னபோது, பலரும் இவர்கள் சும்மா சொல்கிறார்கள். மீண்டும் ஒன்றிணைத்துவிடுவார்கள் என்று சொன்னதைப் பார்க்க முடிந்தது. அடுத்ததே நாங்கள் எப்போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறோம். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியில் அரசியல் புரிதலே இல்லாமல் இருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நாங்கள் அறிவித்ததும் அதிமுகவின் வாக்கு வாங்கி 6-7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதனைத் தெரிந்துகொண்ட முதல்வர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்.
திமுக இத்தனை நாள் தங்களின் திட்டங்களைச் சொல்லி ஆட்சி நடத்தவில்லை. அதிமுகவை அடிமையாக இருக்கிறார்கள் என்று சொல்லியும், பாஜக-வை குறை சொல்லி மட்டும்தான் திமுக அரசியல் செய்துகொண்டிருந்தது. இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திமுகவினர் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். அதேபோல, பாஜக வெளியேறியதும் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூடுதல் இடங்களை இப்போதிலிருந்தே கேட்கத் தொடங்கிவிட்டார்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, சுமுகமாக இருக்கிறோம் என்பதிலேயே அங்குப் பெரிய பிரச்சனை இருப்பதை நன்கு உணர முடிகிறது. தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. ஒரு மெகா கூட்டணி அமைத்து அதிமுக வரும் தேர்தலைச் சந்திக்கும். இந்த விடியா திமுக அரசுக்குத் தக்க பாடம் புகட்டப்படும்”என்றார் விரிவாக.
அதிமுக பாஜக-வை விமர்சித்துப் பேசுமா?
இந்த கூட்டணி முறிவு திமுக கூட்டணியில் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அதிமுக – பாஜகவின் பிரிவு என்பது வெறும் நாடகம் மட்டுமே. ஒன்பது ஆண்டுகளாக பாஜக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வேலைவாய்ப்பு தொடங்கி எதையுமே இந்த பாஜக அரசு செய்யவில்லை
அவ்வளவு ஏன் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார்களே, இப்போதாவது அதிமுகவில் இருக்கும் யாரவது ஒருவராவது பாஜக அரசை விமர்சித்து ஒருவார்த்தை பேசியது உண்டா. இது அனைத்துமே அப்பட்டமான நாடகம் மட்டுமே. ஒருவேளை அதிமுக-வில் இருப்பவர்கள் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினால் அப்போது பார்த்துக்கொள்வோம். அதிமுக தொண்டர்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக அதன் தலைவர்கள் ஆறுதலுக்காகப் பலவற்றைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல, எந்த நம்பிக்கையில் மெகா கூட்டணி அமைக்கப்போகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள் என்பதே புரியவில்லை.
2019-ம் ஆண்டுக்குப் பிறகு திமுகவின் கூட்டணி என்பது கொள்கையாலும், தத்துவத்தினாலும் ஒன்றிணைந்த கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் பிளவு ஏற்பட எந்த வாய்ப்பும் கிடையாது. அதிமுக – பாஜக கூட்டணி பிரிவு திமுகவுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நகைப்புக்குரியது. தமிழக அரசியல் வரலாற்றில் அதிக தொகுதிகளை வென்ற சரித்திரமும் எங்களுக்கு இருக்கிறது. ஒரே ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் அமர்ந்த வரலாறும் உண்டு. அடுத்த தேர்தலில் இரண்டு எம்.எல்.ஏ-வை மட்டும் எதிர்கட்சி வரிசையில் அமரவைத்து வரலாறும் திமுகவுக்கு உண்டு. திமுக எதற்காகவும், யாரைப் பார்த்தும் கிஞ்சிற்றும் அஞ்சியது கிடையாது. தளபதி தலைமையிலான தமிழக அரசு சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது. இது மக்களுக்கான, குறிப்பாகத் தாய்மாருக்கான அரசாக விளங்கிக்கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை” என்றார் உறுதியாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.