சண்டீகர்: பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்மான உறுதி முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கிஷான் மஷ்தூர் சங்ஹர்ஸ் கமிட்டி, பாரதிய கிஷான் யூனியன் (புரட்சிகர), பாரதி கிஷான் யூனியன் (ஏக்டா ஆஸாத்), ஆஸாத் கிஷான் கமிட்டி டோபா, பாரதி கிஷான் யூனியன் (பெஹ்ரம்கே), பாரதி கிஷான் யூனியன் (ஷாகித் பகத் சிங்) மற்றும் பாரதி கிஷான் யூனியன் (சோட்டு ராம்) உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் மூன்று நாட்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகளின் இந்த மூன்று நாள் போராட்டம் இன்று (சனிக்கிழமை) முடிவுக்கு வரும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதம் மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஃபரித்கோட், சாம்ராலா, மோகா, ஹோசியார்பூர், குர்தாஸ்புர், ஜலந்தர், டர்ன் டாரன், பாட்டியாலா, ஃபரோஸ்பூர், பதின்டா மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கடந்த வியாழக்கிழமை தொடங்கி இப்போராட்டம் நடந்து வருகிறது.
விவசாயிகளின் இந்தப் போராட்டாத்தினால் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளன, தடம் மாற்றி விடப்பட்டுள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்தினால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லூதியானா ரயில் நிலையத்தில் இருந்த ரயில் பயணி ஒருவர், தான் கோராக்பூர் செல்வதற்காக சாலை வழியாக ஜலந்தரில் இருந்து வந்திருப்பதாகவும், ரயில் எப்போது வரும் என்ற தகவல் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மற்றொரு பயணி, விவசாயிகளின் போராட்டத்தால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் அமிர்தசரஸிலிருந்து பிஹார் செல்லும் தங்களின் பயணத்தை ரத்து செய்யும் நிர்பந்ததத்துக்கு தள்ளப்பட்டனர் என்றும், பின்னர் ரயில் லூதியானாவில் இருந்து கிளம்புவதாக கேள்விப்பட்டு அமிர்தசரஸிலிருந்து சாலை வழியாக லூதியானா வந்ததாகவும், ஆனால் ரயில் எப்போது வரும் என்ற தகவல் தெரியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
வட இந்தியாவின் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், சுவாமிநாதன் குழு அறிக்கையின் படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோருகின்றனர். மேலும், விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் மற்றும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.