திருநெல்வேலி மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவு. இதனால் விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை வஉசி சிறுவர் பூங்கா மற்றும் வஉசி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்நாள்களில் மக்கள் கூட்டத்தின் நடுவே ஆங்காங்கே திடீரென முளைக்கும் கடைகள் என அப்பகுதியே திருவிழா போல கலைகட்டும்.
இந்நிலையில், நெல்லையில் உள்ள பழைமை வாய்ந்த வஉசி மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. புதிய மைதானத்தில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, பொருநை புத்தகத் திருவிழா கூட இங்குதான் சீரும், சிறப்புமாக நடைபெற்றது.
இந்நிலையில், கட்டி முடித்து திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் புதிதாக கட்டப்பட்ட இந்த வஉசி மைதானத்தின் கேலரி மற்றும் அதன் கூரை இடிந்து விழுந்தது சர்ச்சையானது. இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மற்றொரு புதிய பிரச்னை வஉசி மைதானத்தின் வாசலில் புதிதாக முளைத்துள்ளது.
திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள வஉசி மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலில் அமைந்துள்ள கழிவு நீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கொப்பளித்துக் கொண்டு ஆறாக ஓடுவது தினசரி நிகழ்வாகி விட்டது. இது, விளையாட்டுப் பயிற்சிக்கு வருபவர்கள், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கு வருபவர்களை முகம் சுளிக்க வைப்பதோடு, தொற்று நோய் பரவும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த சாக்கடையை மூக்கை பொத்திக் கொண்டு தாண்டிக் குதித்தோ, அல்லது அதை மிதித்துக் கொண்டோதான், மைதானத்துக்குள்ளேயே நுழையமுடியும். மேலும், இங்கு பொங்கி வரும் இந்த கழிவு நீரானது இதன் அடுத்த கட்டடமாக அமைந்துள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டடத்தின் பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தின் முன்பகுதியில் குட்டை போலத் தேங்கி நின்று அப்பகுதியில் கடும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனை பார்த்த அப்பகுதி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக கொஞ்சம் கல்லையும் மண்ணையும் போட்டு, அணைகட்டி கழிவுநீர் வெளியேறாமல் தடுத்தனர். அதையும் மீறி பீறிட்டு வரும் கழிவு நீரை, பிளீச்சீங் பவுடர் போட்டு, கழிவு நீரின் நாற்றத்தை மடை மாற்ற முயற்சி மேற்கொண்டனர். ஆனால், இவர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கழிவு நீர் வெளியேறுவது மட்டும் நின்றபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த கழிவு நீர் தொல்லையால் இந்த மைதானத்துக்கு வருபவர்கள் மட்டுமன்றி, திருவனந்தபுரம் பிரதான சாலையில் செல்லும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், இதேபகுதியில் நாளை, அதாவது, அக். 1ஆம் தேதி நெல்லை மாவட்டத்திலேயே முதல் முறையாக HAPPY STREET நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதக்கணக்காய் தொடரும் இப்பிரச்னை குறித்து, மாநகராட்சி துணை ஆணையர் காளிமுத்துவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறுவது குறித்து தகவல் வந்தவுடன், அப்பகுதியில் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமித்து கழிவு நீர் வெளியேறுவது தடுக்கப்பட்டதுடன், குழாய் உடைப்பை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலான பணி நிறைவடைந்துவிட்ட நிலையில், விரைவில் கழிவுநீர் வெளியேறுவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தி, உடைப்பு சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், இந்தப் பிரச்னை உடனடியாக சரிசெய்யப்படவில்லையெனில், ஆரோக்கியத்தை நாடி நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள், கூடுதல் பரிசாக தொற்று நோய்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படக் கூடும்.!