புதுடெல்லி: 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 2012-ம் ஆண்டு போக்சோ சட்டத்தைக் கொண்டுவந்தது.
அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்கள் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு கொண்டாலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் உறவுகொள்வதற்கான வயது வரம்பை 18-லிருந்து 16 -ஆக குறைக்க கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வயது வரம்பைக் குறைப்பதற்கான விவாதம் தீவிரமடைந்தது. இந்நிலையில் போக்சோ சட்டத்தில் வயது வரம்பைக் குறைக்க வேண்டாம் என்று 22-வது சட்டக்குழு மத்தியஅரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை, ரிது ராஜ் தலைமையிலான 22-வது சட்டக்குழு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைத்தால், அது குழந்தைத் திருமணம், குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.