பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரீஸ் நல்லிணக்க பவன் கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
மனித நேயம் இல்லையென்றால்…
நமது நாடு மதசார்பற்றது. இங்கு வாழ்பவர்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பரஸ்பர நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். நம்பிக்கை, மனித நேயம் இல்லையென்றால், நாட்டில் அமைதி, நிம்மதி இல்லாமல் போய் விடும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜனதாதளம் கட்சி உடையும் போது, சம்யுக்த ஜனதாதளம் பா.ஜனதாவுடன் இணைவது போல் தெரிந்ததால், அதனுடன் நான் சேரவில்லை. ஒரு வேளை நான் சேர்ந்திருந்தால் மாநில தலைவராகி இருப்பேன். இதற்கு முன்பு பா.ஜனதாவுடன் சேர்ந்து குமாரசாமி ஆட்சி அமைத்த போது, தேவேகவுடா பேசியதை நினைத்து பார்க்க வேண்டும்.
அதிகாரத்திற்காக கூட்டணி
தற்போது ஜனதாதளம் (எஸ்) கட்சியை காப்பாற்றுவதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக தேவேகவுடா கூறுகிறார். ஜனதாதளம் (எஸ்) கட்சி அதிகாரத்திற்காக யாருடனாவது கூட்டணி அமைப்பது சரியானது இல்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டதில்லை. பா.ஜனதா ஒரு மதவாத கட்சியாகும். பா.ஜனதாவினர் சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரானவர்கள்.
அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை. சாதிகள், மதம் இடையே மோதலை உருவாக்குவது அரசியல் இல்லை. மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும். அதை விடுத்து மக்களையும், சமுதாயத்தையும் பிரித்து அரசியல் செய்ய கூடாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பாரூக் அப்துல்லாவை காங்கிரசுக்கு வரும்படி அழைத்தும், அவர் வரவில்லை.
கடும் நடவடிக்கை
மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா தீவைத்தால், அந்த தீ பற்றி எரிவதற்கான வேலையை ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் செய்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. சட்டத்தை கையில் எடுப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அரசியலில் எவ்வளவு பெரிய சக்திகளாக இருந்தாலும் சரி, சட்டத்தை கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.
நான் இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்த போது சிறுபான்மையின சமுதாயத்தின் வளர்ச்சியாக ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருந்தேன். தற்போதும் சிறுபான்மையின சமுதாய வளர்ச்சிக்காக தேவையான நிதியை ஒதுக்கி வருகிறேன். மாநிலத்தில் அனைத்து தரப்பினருக்கும் சமமான நீதி கிடைக்க செய்வது அரசின் பொறுப்பாகும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாயத்தினருக்கும் நியாயம் கிடைப்பதுடன், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, முன்னுரிமை வழங்குவது அரசின் கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.