‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் – சமுத்திரகனி
சேலம் டால்மியா போர்டு அருகே நடந்த ஹோட்டல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நடிகர் சமுத்திரக்கனி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்திற்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் வேறு இடத்தில் இருந்து வந்து இருக்கிறேன். காவிரி நதி நீர் பிரச்சினை எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. முடிவு எல்லாம் அவர்கள் (தலைவர்கள்) பேசி பார்த்து முடிவு செய்வார்கள். ஆளாளுக்கு சத்தம் போட்டுக்கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது. இதை தாண்டி தற்போது வந்து இருக்கும் நிகழ்ச்சி குறித்து பேசலாம். நீங்கள் (நிருபர்) தேவை இல்லாமல் என்கிட்ட இருந்து வார்த்தைகளை எடுக்காதீர்கள்.
காவிரி விஷயத்திற்காக நிறைய விஷயங்கள் பண்ணியாச்சு. தனி ஒரு மனிதனாக கத்தியோ, உருண்டோ, பிரண்டோ மற்றும் கூட்டம் கூடி எதிர்ப்பு தெரிவித்தோ ஒன்றும் செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசி, நடக்க வேண்டிய விஷயம் நடந்தால், அது நடக்கும் அவ்வளவுதான். காவிரி பிரச்சினை தொடர்பாக நடிகர் சங்கத்தில் இருந்து தெரிவித்தால், நான் பிரீயாக இருந்தால் கலந்து கொள்வேன். இதுவரை நடிகர் சங்கத்திற்கு போனது இல்லை. வேறு வேலையில் இருப்பதால் போகவில்லை.
திரைத்துறையினர் எல்ல விஷயங்களும் உண்ணாவிரதம், போராட்டம் நடத்தி இருக்கின்றனர் எதுவுமே குறையலை. அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்றால் ஒன்றும் இல்லை. சித்தார்த் விஷயத்தில் எதாவது சொல்வதால் அங்கேயும், இங்கேயும் சண்டை தான் போட்டுக்கொண்டு இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விஷயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பேசி சரியான முடிவெடுத்து நடக்க வேண்டும்.
பிரகாஷ்ராஜ் கர்நாடகவில் பிறந்தால் அவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசுவாரா. அவர் பேசுவதால் ஒன்றும் ஆகாது. விடை கிடைக்காத கேள்விக்கு எல்லோரும் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். விடை கொடுப்பவர்கள் சரியாக கொடுப்பார்கள் என நம்புறோம். தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதன் எதிர்ப்புக்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த சண்டை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு வெட்டு ஒன்ணு துண்டு இரண்டு என பதில் வர மாதிரி தெரியவில்லை.
இப்போது படங்கள் குறித்து செல்போன்கள் வைத்திருக்கும் எல்லோரும் விமர்சனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். யார் என்ன விமர்சனம் செய்தாலும் தரமான படமாக இருந்தால் ஓடும். இதற்கு உதாரணமாக போர்த் தொழில் படம் எதிர்பார்க்காத அளவு வெற்றியை கொடுத்தது. படம் எடுப்பவர்கள் சரியானவர்களா? இருந்தால் போதும். நல்ல விஷயங்கள் சொன்னால் மக்கள் இரு கையை விரித்து வரவேற்பு கொடுப்பார்கள்.
நடிகர் விஷால் வேண்டும் என்றால் சென்சாருக்கு பணம் கொடுத்து இருக்கலாம். நான் இதுவரை 5படம் புரடியூஸ் பண்ணி இருக்கேன், அதற்காக யாருக்கும் பணம் கொடுத்தது இல்லை. அவருக்கு எதாவது தேவை இருக்கும் கொடுத்து இருக்கலாம். ஆனால் கஷ்டப்பட்டு தயாரித்த என்னுடைய அப்பா திரைப்படத்திற்கு வரி விலக்கு பெற காசு கொடுத்து தான் சான்றிதழ் பெற்றேன். இப்படி எதாவது சொல்லிருவேன் என்பதால் என்னை விட்டுருங்கள் என்றேன். அதிகமாக நிஜம் சொல்லும் போது, இது நிறைய பேர போய் இடிக்கும்.
ஒரு ஆண்டுக்கு ஆயிரம் படங்கள் வெளியிட முடியாமல் இருக்கு. ஏனென்றால் செல்போனில் கூட படம் எடுக்கலாம் என ஆகிவிட்டது. ஓ.டி.டி.யில் தவறான படங்களை நீங்கள் ஏன் பார்கிறீர்கள். அதை தவிர்த்து நல்ல விஷயங்களை பார்க்க வேண்டியது தான். படத்தில் 13, 16, 18 பிளஸ் வயது என போட்டு இருக்கும். வீட்டில் 13 பிளஸ் வயது உள்ளவர்கள் இருந்தால் அதற்கு ஏற்றார் போல் படம் பார்க்க வேண்டும். யாரும் இல்லாத நேரத்தில் 18 பிளஸ் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் லியோ இசைவெளியீடு ரத்து குறித்து தனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இருதினங்களுக்கு முன் நடிகர் விஷால் தனது மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்கு மும்பையில் சென்சார் அதிகாரி ரூ.6 லட்சம் பெற்றார் என குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பாக வீடியோவும் வெளியிட்டார் விஷால். இதற்கு 24மணிநேரத்திற்குள் மத்திய தகவல் ஒலிபரப்புதுறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சமுத்திரகனியும் அதுபோன்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.