கிருஷ்ணகிரி: ”உண்மை நிலையை மறந்து, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கருப்பண்ணன் பேசிவிட்டார்,” என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில், நேற்று அவர் கூறியதாவது:
பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்த, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்து, நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணியிலிருந்து, பா.ஜ.,வை வெளியேற்றி விட்டோம்.
எங்கள் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என, விளக்கமும் கொடுத்து விட்டோம். இருப்பினும், தொடர்ந்து சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், ஒரு சில அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி, மக்களிடையே குழப்பம் விளைவிக்கின்றனர்.
தி.மு.க., அரசை கலைக்குமாறு மத்திய பா.ஜ., அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தோம் எனவும், மத்திய அரசு அதைச் செய்யவில்லை. அதனால் தான் கூட்டணி முறிந்தது என்ற தகவலை கூறியுள்ளனர்.
அ.தி.மு.க., ஆரம்பித்து, 50 ஆண்டுகளாகிறது. தமிழகத்தில் ஆட்சியில், 30 ஆண்டுகள் இருந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சி, இது போன்ற கீழ்த்தரமான செயலை என்றைக்கும் செய்யாது.
பண்ருட்டி ராமச்சந்திரன், ஊடகங்களில் எங்களை நம்பிக்கை துரோகிகள் என்கிறார். அவர் பல்வேறு கட்சிகளில் பயணித்தாலும், எங்கும் அவர், யாருக்கும் நம்பிக்கையாக இருந்ததில்லை; நம்பிக்கை துரோகத்தின் உச்சம் அவர்.
பா.ஜ.,வின் எச்.ராஜா எங்களை நெல்லிக்காய் மூட்டை என்றும், கூட்டணியிலிருந்து விலகியதால், தற்போது பாரம் குறைந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
எங்கள் தயவால் தான், அவர் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார் என்பதை மறந்து விடக்கூடாது. மத்திய பா.ஜ., அரசுக்கு பல்வேறு சட்டங்களை இயற்ற, அ.தி.மு.க., ஆதரவு அளித்துள்ளது என்பதையும் அவர் மறந்து விடக்கூடாது.
காவிரி விவகாரத்தில், தமிழக அரசு முறையாக செயல்பட தவறும் பட்சத்தில், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும். வரும், 2024 லோக்சபா தேர்தல் மற்றும் 2026சட்டசபை தேர்தல் இரண்டிலும், பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே தேர்தலை சந்திக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, ‘வரும், 2026 சட்டசபை தேர்தலில், அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க, பா.ஜ., கூறியது. அதை ஏற்க மறுத்து பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கருப்பண்ணன் பேசியுள்ளாரே’ என்ற கேள்விக்கு முனுசாமி பதில் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு, தமிழக முதல்வர் பதவி கேட்டனர் என்ற தகவல்கள் வெளியாகின. வலைதளங்களில் தொடர்ந்து தவறான கருத்துக்கள் வலம் வரும் போது, அதைப் படிக்கும்போது அந்த கருத்தில் தன்னை ஆழ்த்தியிருக்கக்கூடும். அதையடுத்து, மேடையில பேசும்போது, உண்மையான நிலையை மறந்து, கருப்பண்ணன் இல்லாத ஒரு கருத்தைப் பேசி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்