சிவாஜி…மொத்த இந்திய சினிமாவிற்கே சிவாஜி கணேசன் தான் திறந்த வெளிப்பல்கலைக்கழகம். அனைத்து நடிகர்களும் இவருக்கே ரசிகர்களாய் இருப்பது தான் நடிகர் திலகத்தின் பெருமை. அந்த சமுத்திரத்தில் விழுந்து கிடந்த போது கிடைத்த முத்துக்கள் இவை.
* வி.சி.கணேசனை மராட்டிய வீரன் சிவாஜியாக மேடையின் கீழே இருந்து பார்த்தார் தந்தை பெரியார். உடனே மேடையின் மேல் ஏறி நீயே சிவாஜி என தீர்ப்பு வழங்கினார். அன்று முதல் தான் சிவாஜி கணேசன்.
* விநாயகர் மீது ஐயாவுக்கு ஸ்பெஷல் பக்தி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் சிலையை எப்போதும் கூடவே வைத்திருப்பார். அவரது எல்லா பிரார்த்தனைகளிலும் விநாயகர் இடம்பெறுவார். வீட்டிற்கு முன்புகூட பிள்ளையார் சிலை தான்.
* பல தடைகளை மீறி கதாநாயகனாக அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பெருமாள் வீட்டிற்கு ஒவ்வொரு பொங்கலுக்கும் போய் ஆசி பெற்று பரிசுப் பொருட்களை கொடுத்து வருவார். அவரின் வீட்டு விசேஷங்களுக்கு அவர்தான் வரவேற்பாளர். இது பிரபு காலம் வரைக்கும்கூட நீடிக்கிறது.
* 301 படங்களில் நடித்து விட்டார். சிவாஜி தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழ் படங்களின் எண்ணிக்கை 270. கௌரவத் தோற்றத்தில் 19 படங்கள் செய்திருக்கிறார். எம்ஜிஆர் ரோடு கூண்டுக்கிளி என ஒரே படம்தான்.
* ஜெயலலிதாவை அம்மு எனவும் எம்ஜிஆரை அண்ணா எனவும் கலைஞரை மூனா கானா எனவும் அழைப்பார். மற்றவர்களை அவர் அழைப்பதெல்லாம் அவரது பிரியம் சார்ந்தது தான்.
* இரத்தத் திலகம் படத்தில் பிரமாதமாக நடித்து ஸ்டைலில் கவனம் பெற்றார். அதற்காக சென்னை சினிமா ரசிகர் மன்றம் அவருக்கு கொடுத்தது ஒரிஜினல் துப்பாக்கி.
* பொங்கலுக்கு முன்தினம் தயாரிப்பாளர் பெருமாள் அவர்களை பார்த்துவிட்டு அப்படியே குடும்பத்தோடு சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு போய்விடுவார். அங்கே தான் பொங்கல் கொண்டாட்டம் அதகளப்படும். ஒவ்வொரு பொங்கல் அன்றும் சினிமா விருந்தினர்கள் நான்கு பேராவது கலந்து கொள்வார்கள்.
* அண்ணன் தம்பி குடும்பத்தோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார் சிவாஜி. அதில் அவர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அவரது வீட்டு நிர்வாகம் கால்ஷீட் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டது அவரது தம்பி சண்முகம் தான்.
* நேரம் தவறாமல் இருப்பதில் சிவாஜியை மிஞ்ச முடியாது. ஏழு மணிக்கு படப்பிடிப்பென்றால் ஆறேமுக்கால் மணிக்கு ஒப்பனையோடு ஆஜர் ஆகிவிடுவார். நடித்தபோது ஒரு நாள் கூட தாமதித்து வந்ததாக வரலாறு இல்லை.
* யானைகளின் மீது தனித்த பிரியம் கொண்டவர். தஞ்சை மாரியம்மன் கோவில், திருப்பதிக்கு யானைகளை பரிசாக அளித்திருக்கிறார். யானையிடம் பயப்படாமல் விளையாடிக் கொண்டிருப்பார். யானைகளும் அவரிடம் செல்லம் கொஞ்சும்.
* கடிகாரங்கள் சேகரிப்பதில் சிவாஜிக்கு அலாதி பிரியம். அவர் இறக்கும்போது 2000 க்கு மேல் கடிகாரங்கள் இருந்தன.
* தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி தோட்டத்தில் சிலை வைத்து கௌரவித்தார். அந்தச் சிலையை திறந்து வைத்தது வேறு யாருமல்ல. இன்னொரு தாய் பாசம் கொண்ட எம்ஜிஆர் தான்.
* சிவாஜியின் கனவு வேடம் தந்தை பெரியார் வேடத்தில் முழுமையாக பாத்திரமேற்று நடிப்பது. கடைசி வரைக்கும் ஏனோ அது நிறைவேறவே இல்லை.
* கேரம்போர்டு விளையாட்டில் அவருக்கு அலாதி பிரியம். கிரிக்கெட் நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்.
* நடிகர் திலகம் போட்ட முதல் வேடம் பெண் வேடம்தான். அதுவும் உப்பரிகையின் மீது நின்று ராமனை பார்க்கும் சீதை வேடம்.