கோவை: மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ்,ஜெயபால் ஆகியோர் கூறியதாவது: மின் கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மிக கடுமையாக பாதித்துள்ளது. நிலை கட்டண உயர்வை கைவிடுதல், உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக கைவிடுதல், மேற்கூரையில் அமைக்கப்படும் சூரிய ஒளி ஆற்றலுக்கு யூனிட் கட்டணத்தை கைவிட வேண்டும்,
இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் அமைச்சர்கள் ராஜா, தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினோம். 12 கிலோ வாட் பயன்பாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3 பி-பிரிவிலிருந்து 3 ஏ-1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொள்வதாகவும், மற்ற நான்கு கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து அக்டோபர் 4-ம் தேதி மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.